தன் நாட்டு மக்களின் சுயக்கட்டுப்பாட்டை வலியுறுத்த இந்திய பவுலர் பும்ராவின் நோ-பால் படத்தை வெளியிட்டு அறிவுரை வழங்கியுள்ளது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 அணியான இஸ்லாமாபாத் யுனைடெட் அணி.
இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
உலகம் முழுதும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருவதையடுத்து நாடுகள் முழு அடைப்பு, ஊரடங்கு போன்ற நடைமுறைகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்துவதோடு, சுயக்கட்டுப்பாடு ஒன்றே கரோனா வைரஸை ஒழிக்க ஒரே வழி என்று அமெரிக்கா முதல் அனைத்து நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 அணியான இஸ்லாமாபாத் யுனைடெட் அணி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்பதை உணர்த்த மிகவும் மட்டரகமான ரசனையுடன் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு ஒருநாள் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா வீசிய நோ-பால் படத்தை வெளியிட்டு மக்கள் வீட்டுக்குள் இருப்பது நல்லது என்று கூறியுள்ளது.
பாகிஸ்தான் தொடக்க வீரர் ஃபகார் ஜமானுக்கு பும்ரா வீசிய நோ-பால் ஆகும் அது. ஃபகார் ஜமான் அந்த மேட்சில் 114 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. பும்ரா பந்தை எட்ஜ் செய்தார் ஜமான், தோனி கேட்ச் எடுத்தார் ஆனால் அது நோ-பால். சாம்பியன்ஸ் ட்ராபியில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்திய இறுதி போட்டியாகும் அது.
பும்ராவின் இந்த நோ-பால் படத்தை வெளியிட்டு, “கோட்டைத் தாண்டாதீர்கள். அதற்கு விலை கொடுக்க நேரிடும். உங்கள் வீடுகளை விட்டு அனாவசியமாக வெளியே வர வேண்டாம். சமூக விலக்கலைக் கடைப்பிடிக்கவும்.” என்று பதிவிட்டுள்ளது.
இதனையடுத்து இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் பதிவுக்குக் கீழ் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.