கிரிக்கெட்டில் சூதாட்டம் என்பது, ஸ்பாட் பிக்சிங் என்பது ‘கொலைக்குச் சமம்’ எனவே அதில் ஈடுபடுபவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாவேத் மியாண்டட் கூறியுள்ளார்.
தன் யூடியூப் சேனலில் ஜாவேத் கூறியதாவது, “ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபடுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் ஏனெனில் இதுவும் கொலையும் ஒன்றுதான்.
இப்படிச் செய்தால் சூதாட்டம் பற்றி வீரர்களுக்கு அச்சம் ஏற்படும். ஸ்பாட் பிக்சிங் என்பது இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு விரோதமானது.. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இவர்களை மன்னிப்பதன் மூலம் தவறிழைக்கிறது. இவர்களை மீண்டும் விளையாட அனுமதிப்பவர்கள் தங்களை நினைத்தே வெட்கப்பட வேண்டும்.
சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு நாடு, குடும்பம் எதுவும் கிடையாது. ஆன்மீக ரீதியாக அவர்கள் தெளிவற்றவர்கள். மனிதார்த்த அடிப்படைகளில் இத்தகைய செயல்கள் மன்னிப்புக்கு அருகதையற்றவை, அவர்கள் வாழத் தகுதியற்றவர்கள். சூதாட்டத்தில் பணம் சம்பாதிப்பது பிறகு தன் செல்வாக்கைப் பயன்படுத்தி மீண்டும் கிரிக்கெட் ஆடுவது, இது சரியானதா?” என்று கேட்கிறார் ஜாவேத் மியாண்டட்.