விளையாட்டு

குறைக்கப்பட்ட போட்டிகளுடன் ஐபிஎல் நடக்கும்? - அக்டோபரில் நடக்க வாய்ப்பு

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள், விம்பிள்டன் உட்பட பல முக்கியப் போட்டித் தொடர்கள் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் ஐபிஎல் டி20 தொடர் மட்டும் எந்த ஒரு திட்டவட்ட முடிவையும் அறிவிக்காமல் இருக்கிறது.

ஆனால் ஐபிஎல் அணிகளின் நிர்வாகிகள் தரப்பில் தனியார் விளையாட்டுச் செய்தி ஊடகம் ஒன்றிற்குத் தெரிவித்த தகவல்களின் படி குறைந்த போட்டிகள் கொண்ட ஐபிஎல் 2020 தொடர் அக்டோபரில் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறப்படுகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் புரோமோட்டர் மனோஜ் பதாலே அக்டோபரில் சாத்தியமுள்ளதாக சூசகமாக தெரிவித்துள்ளார்.

இந்தக் கோடையில் ஐபிஎல் நடக்காது, ஆனால் தொடர் ரத்து செய்யப்படவில்லை என்று அணி உரிமையாளர்கள் தரப்பில் அதன் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது வெறும் பிசிசிஐ தொடர்பானது மட்டுமல்ல இதைச் சுற்றி பெரிய வர்த்தக வளையம் உள்ளது, எனவே ரத்து என்று கூறுவதற்கில்லை குறைக்கப்பட்ட போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடர் சாத்தியமே இதற்காக பிற டெஸ்ட் விளையாடும் நாடுகளுடன் பிசிசிஐ பேசி வருகிறது என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கோடை காலத்தை விட்டால் ஐபிஎல் போட்டிகளை நடத்த சாளரம் கிடைக்காது, ஏனெனில் ஐசிசி தொடர்கள், சர்வதேச இருதரப்பு தொடர்கள், டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளை ஐபிஎல் போட்டிகளுக்காக தியாகம் செய்ய முடியாது.

கோவிட்19ஐ இந்தியா முறியடித்தால், ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றால் அது உலக விளையாட்டுக்களை நடத்த வெளிச்சம் பாய்ச்சுவதாக அமையும் என்று கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT