சுரேஷ் ரெய்னா 
விளையாட்டு

கரோனாவுக்கு எதிராகப் போர்: கிரிக்கெட் வீரர்கள்  கம்பீர், ரெய்னா, ரஹானே நிதியுதவி

பிடிஐ

கரோனா வைரஸுக்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியாவும் போராடி வரும் நிலையில், அதற்கு உதவும் வகையில் பிரதமர் நிவாரண நிதிக்கு பாஜக எம்.பி.யும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர் ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார்.

கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 23 ஆகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தையும் நெருங்குகிறது. கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க 21 நாட்கள் லாக் டவுன் திட்டத்தை பிரதமர் மோடி அமல்படுத்தினார்.

கரோனா வைரஸின் பொருளாதாரப் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு மக்கள் தாரளமாக நிதி வழங்கலாம் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி ஏராளமான பிரபலங்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர்.

கவுதம் கம்பீர்

பாஜகவைச் சேர்ந்தவரும் டெல்லி கிழக்குத் தொகுதி எம்.பி.யுமான கவுதம் கம்பீர், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடியை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

இதுகுறித்து கவுதம் கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் ,“நம் நாட்டின் வளங்களை கோவிட்-19 வைரஸுக்கு எதிராகப் போரிட திருப்பிவிட வேண்டிய நேரம் இது. இதற்காக எனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி நிதி வழங்குகிறேன். மேலும் என்னுடைய ஒரு மாத ஊதியத்தையும் வழங்குகிறேன்” எனத் தெரிவித்தார்.

இதுதவிர கவுதம் கம்பீர் நடத்திவரும் அறக்கட்டளை சார்பில் லாக் டவுன் காலகட்டத்தில் டெல்லியில் சாலையோம் வசிக்கும் மக்கள், வீடில்லாதவர்களுக்கு நாள்தோறும் 2 ஆயிரம் உணவுப் பொட்டலங்களையும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அஜின்கயே ரகானே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரும், இந்திய அணி வீரருமான சுரேஷ் ரெய்னா கரானா வைரஸ் தடுப்புக்கு ரூ.52 லட்சம் நிதி வழங்கியுள்ளார். இதில் பிரதமரின் கேர்ஸ் நிதிக்கு ரூ.31 லட்சமும், உ.பி. முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.21 லட்சத்தையும் சுரேஷ் ரெய்னா நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் அஜின்கயே ரஹானே கரோனா வைரஸ் எதிர்ப்புக்காக ரூ.10 லட்சம் நிதி வழங்கியுள்ளார். மகாராஷ்டிர முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு ரஹானே ரூ.10 லட்சம் வழங்கியதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் ரூ.50 லட்சம் நிதி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT