நெருக்கடியான சூழலில் சிறப் பான ஆட்டத்திறனை வெளிப் படுத்துவது எப்படி என்பதைக் கற்றுக் கொள்ள இந்தியாவுக்கு எதிராக அடிக்கடி விளையாட வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
கடந்த காலங்களில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று விளையாடும் போது, நாங்கள் திணறினோம். அதேசமயம், நெருக்கடியைச் சமாளிப்பது எப்படி என்பதையும் அதன் மூலம் கற்றுக் கொண்டோம். பாகிஸ்தான் வீரர்கள் நெருக்கடி யான சூழலிலும் சிறப்பாக விளையாடுவதைக் கற்றுக் கொள்வதற்கு, இந்தியாவுடன் அடிக்கடி விளையாடுவதைத் தவிர வேறு சிறப்பான வழியில்லை.
வரும் டிசம்பர் மாதம் இந்தியா பாகிஸ்தான் இடையே புதிய கிரிக்கெட் அத்தியாயம் தொடங்குவதை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். எங்கு விளை யாடுகிறோம் என்பதை விட, இந்தியாவுக்கு எதிராக நாம் அடிக்கடி விளையாட வேண்டும்.
பெரிய அணிகளுக்கு எதிரான சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடாததால் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நாம் பின்தங்கியிருக்கிறோம். எனவே, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் அதிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
உலகில் மிக அதிக ரன் குவித் வர்கள் பட்டியலில் பாகிஸ்தான் வீரர்கள் பெயரை பார்க்க முடிய வில்லை. நானோ, முகமது யூசுப்போ டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை எடுக்க முடிய வில்லை. யூனிஸ்கான் அதனைச் சாதிப்பார் என நம்புகிறேன்.
பாகிஸ்தான் அணியில் அரசியல், உட்பூசல் எனப் பல்வேறு பிரச்சினைகளையும் தாண்டி யூனிஸ்கான் தனது விளையாட்டில் கவனம் செலுத்தி வருவது அவரின் மிகப்பெரும் பலமாகும். அவர், தனது விளையாட்டுத் திறனால் சர்வதேச தரம்வாய்ந்த வீரராக உருவெடுத்திருக்கிறார். இவ்வாறு, இன்ஸமாம் தெரிவித்தார்.