கரோனா வைரஸ் தொற்றை தடுக்க இந்திய அரசு வரும் 21 நாட்களுக்கு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று பட்லரின் விக்கெட்டை மன்கட் முறையில் வீழ்த்தியதை நினைவுபடுத்தி கிரிக்கெட் வீரர் அஸ்வின் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் ஊரடங்கு உத்தரவைப் பின்பற்ற வேண்டும் என்று பிரபலங்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் கடந்த வருடம் மன்கட் முறையில் வீழ்த்திய விக்கெட் தொடர்பான புகைப்படத்தை ஊரடங்கு உத்தரவுக்கு எடுத்துக்காட்டாக பதிவிட்டுள்ளார்.
மன்கட் முறையில் கடந்த கடந்த வருடம் ஐபிஎல் போட்டியில் டெல்லி வீரர் ராஸ் பட்லைரை அஸ்வின் அவுட் செய்தார். இப்புகைப்படத்தை தற்போது கரோனா வைரஸ் காரணமாக நடைமுறையில் உள்ள ஊரடங்குடன் தொடர்புபடுத்தி ரசிகர் ஒருவர் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு அனுப்பினார்.
இந்த நிலையில் இந்தப் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் அஸ்வின் பதிவிட்டு மக்கள் அனைவரும் ஊரடங்கைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அதில் அஸ்வின் குறிப்பிடுகையில்,“ இதனை எனக்கு ஒரு நபர் அனுப்பினார். இந்த ரன் அவுட் நடந்து ஒருவருடம் ஆகிவிட்டது. தேசமே ஊரடங்கில் இருக்கும்போது இதனைக் குடிமக்களுக்கு நினைவுபடுத்துவது நல்லது. உள்ளேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.