உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் காஷ்யப், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் காஷ்யப் தனது முதல் சுற்றில் 21-17, 21-10 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் எரிக் மெய்ஸை தோற்கடித்தார். போட்டித் தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் காஷ்யப், அடுத்த சுற்றில் வியட்நாமின் டியென் மின்னை சந்திக்கிறார்.
மற்றொரு முதல் சுற்றில் எச்.எஸ்.பிரணாய் 21-12, 21-16 என்ற நேர் செட்களில் பிரேசிலின் அலெக்ஸ் யுவானைத் தோற்கடித்தார். போட்டித் தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் பிரணாய், அடுத்ததாக உகாண்டாவின் எட்வின் எகிரிங்கை சந்திக்கிறார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அருண் விஷ்ணு-அபர்ணா பாலன் ஜோடி 18-21, 21-10, 22-24 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் ஈவ்ஜெனி டிரெமின்-ஈவ்ஜெனியா டிமோவா ஜோடியிடம் தோல்வி கண்டது. இதேபிரிவில் மற்றொரு இந்திய ஜோடியான தருண் கோனா-சிக்கி ரெட்டி ஜோடி 13-21, 17-21 என்ற நேர் செட்களில் சீன தைபேவின் லியாவ் மின்-சென் ஹுவான் ஜோடியிடம் தோல்வி கண்டது.
இந்தியாவின் முதல் நிலை வீராங்கனையான சாய்னா நெவால், பி.வி.சிந்து, இந்தியாவின் முதல் நிலை வீரரான ஸ்ரீகாந்த் ஆகியோர் இன்று களமிறங்குகிறார்கள்.