2020-21-ம் ஆண்டுக்கான சம்பள ஒப்பந்த பட்டியலை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. 16 பேர் கொண்ட இந்தபட்டியலில் மூத்த வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெய்ன் நீக்கப்பட்டுள்ளார். அதேவேளையில் இளம் வேகப்பந்து வீச்சாளரான பியூரன் ஹெண்ட்ரிக்ஸ் இடம் பெற்றுள்ளார்.
36 வயதான ஸ்டெயின் காயம்காரணமாக கடந்த 3 வருடங்களாக அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த பிரப்ரவரி மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பினார். வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி 20 உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணியில் இடம் பெறும் வகையில் தன்னை தீவிரமாக தயார்படுத்தி வருகிறார் ஸ்டெயின்.
ஆனால் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமோ தற்போது இளம் வீரர்கள் மீது தனது கவனத்தை திருப்பி உள்ளது. இதன் ஒரு அங்கமாக சம்பள ஒப்பந்த பட்டியலில் இளம் வீரர்களான பியூரன் ஹெண்ட்ரிக்ஸ், அன்ரிச் நார்ட்ஜே, டுவைன்பிரிட்டோரியஸ், ராஸி வான் டெர்டஸ்சென் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். முன்னாள் கேப்டன் டு பிளெஸ்ஸிக்கும் சம்பள ஒப்பந்த பட்டியலில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இவர்களுடன் சம்பள ஒப்பந்த பட்டியலில் குயிண்டன் டி காக், தெம்பா பவுமா, டீன் எல்கர், ரீசா ஹென்ட்ரிக்ஸ், கேசவ் மகாராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர்,லுங்கி நிகிடி, அன்டில் பெலுக்வயோ, காகிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்ஸி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். - பிடிஐ