விளையாட்டு

தனிமையில் இருக்காவிட்டால் சிறைக்கு செல்லுங்கள்: கவுதம் கம்பீர் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள் அல்லது சிறைக்கு செல்லுங்கள் என முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக மக்களவை உறுப்பி னருமான கவுதம் கம்பீர் எச்சரித்துள்ளார்.

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் அச்சுறுத்தலாக திகழ்ந்து வருகிறது. இதுவரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 3.45 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார்15 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இந்த வைரஸ்தாக்குதலுக்கு 7 பேர் இறந்துள்ளனர். மேலும் 433 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கிடையே வைரஸ் பரவுவதை தடுக்கும் ஒரு முயற்சியாக பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளின்படி நேற்று முன்தினம் நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த சுய ஊரடங்கில் பெரும்பாலான மக்கள் பங்கேற்று வீட்டை விட்டு வெளியேறாமல் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டனர்.

இருப்பினுடம் சுய ஊரடங்கு இரவு 9 மணிக்கு முடிவடைந்ததும் சிலர் கூட்டமாக வீதிகளில் சுற்றித்திரிந்தனர். இந்நிலையில் இவர்களை கவுதம் கம்பீர் கடுமையாக சாடி உள்ளார். இதுதொடர்பாக கம்பீர் தனது ட்விட்டர் பதிவில், “நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் அல்லது நீங்கள் சிறைக்கு செல்லுங்கள்.

சமூகத்துக்கு அச்சுறுத்தலாக இருக்காதீர்கள். நாங்கள் வாழ்வதற்காக போராடுகிறோம், வாழ்வாதாரத்துக்காக அல்ல. அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள்” என தெரிவித் துள்ளார்.

- பிடிஐ

SCROLL FOR NEXT