விளையாட்டு

உலகக்கோப்பை டி20 அணியில் தோனி அவசியமா? - ரஞ்சி  ‘கிங்’ வாசிம் ஜாஃபர் கூறுவதென்ன?

செய்திப்பிரிவு

முன்னாள் இந்திய அணியின் தொடக்க வீரரும், உள்நாட்டு கிரிக்கெட் லெஜண்டுமான வாசிம் ஜாஃபர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி தோனியைக் கடந்து எதையும் யோசிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இந்த மாதத் தொடக்கத்தில் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்த வாசிம் ஜாஃபர், தோனியை அணியில் சேர்த்தால்தான் கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் மீதான அழுத்தம் குறையும் என்றார்.

“தோனி உடல்தகுதி பெற்றிருக்கிறார் என்றால் பார்மிலும் இருக்கிறார் என்றால் தோனியைத் தாண்டி நாம் வேறொருவரை யோசிக்க வாய்ப்பில்லை, விக்கெட் கீப்பிங்கில் அவர் ஒரு சொத்து, பிறகு கிரேட் பினிஷர், தோனி இருப்பது ராகுலின் மீதான் அழுத்தத்தைக் குறைக்கும் மேலும் ரிஷப் பந்த்தையும் பேட்ஸ்மெனாக நாம் பயன்படுத்தலாம். அதாவது ஒரு இடது கை வீரர் தேவை எனும்போது” என்றார் வாசிம் ஜாஃபர்.

2019 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா தோற்றதோடு கிரிக்கெட்டை விட்டு காணாமல் போன தோனி எவருக்கும் எந்த ஒரு பிடியையும் கொடுக்காமல் ஓய்வையும் அறிவிக்காமல் போக்கு காட்டி வருகிறார் என்று அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் வாசிம் ஜாஃபர் அவர் அணியில் இருந்தால் கிடைக்கும் பலனை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் பார்ம் தான் அவரது தேர்வை முடிவு செய்யும் எனும்போது ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்பதே சந்தேகத்துக்குள்ளாகியுள்ளது. கரோனாவினால் மார்ச் 29 தொடங்க வேண்டிய ஐபிஎல் ஏப்ரல் 15 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT