இந்திய ‘ஏ’ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணி தனது முதல் இன்னிங்ஸில் 138.5 ஓவர்களில் 542 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
கேரள மாநிலம் வயநாட்டில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 88 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய அந்த அணியில் பவுமா 66 ரன்களிலும், பீடெட் 16 ரன்களிலும் வெளியேறினர்.
இதையடுத்து இணைந்த டி காக்- கேப்டன் டேன் விலாஸ் ஜோடி அதிரடியாக ஆட தென் ஆப்பிரிக்கா 400 ரன்களைக் கடந்தது. 102 பந்துகளில் 3 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் குவித்த டிகாக், தென் ஆப்பிரிக்கா 492 ரன்களை எட்டியபோது ஆட்டமிழந்தார். டி காக்-டேன் விலாஸ் ஜோடி 107 ரன்கள் குவித்தது. இதன்பிறகு டேன் விலாஸ் 74 பந்துகளில் 2 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 138.5 ஓவர்களில் 542 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியத் தரப் பில் அக் ஷர் படேல் 4 விக்கெட் டுகளையும், ஜெயந்த் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்தியா-122/3
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 34.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் அம்பட்டி ராயுடு 11 ரன்களுடனும், கருண் நாயர் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். முன்னதாக ஜிவான்ஜோத் சிங் 22, அபினவ் முகுந்த் 38, ஷ்ரேயாஸ் ஐயர் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட இந்தியா இன்னும் 420 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.