விளையாட்டு

கரோனா வைரஸ் அச்சுறுத்தல்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் செப்டம்பருக்கு தள்ளிவைப்பு

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சுஓபன் டென்னிஸ் தொடர் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் வரும் மே 24 முதல் ஜூன் 7 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் உலகம் முழுவதும் பரவிவரும் கரோனா வைரஸ் காரணமாக இந்தத் தொடர் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 4 வரைநடத்தப்படும் என பிரெஞ்சு டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் போட்டி முடிவடைந்த ஒரு வார காலத்தில் பிரெஞ்சு ஓபன் தொடர் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது டென்னிஸ் வீரர், வீராங்கனைகள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. கனடா வீரர் வாசெக் பாஸ்பிசில், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, ருமேனியாவின் சொர்னா கிறிஸ்டியா ஆகியோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பிரெஞ்சு ஓபன் தொடரின் போது அமெரிக்காவின் போஸ்டன் நகரில் லேவர்கோப்பை டென்னிஸ் போட்டி நடைபெறுகிறது. இதில் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீரர்கள், உலகஅணியை எதிர்த்து விளையாடுவார்கள். சுவிட்சர்லாந்தின் ரோஜர்பெடரர் இந்தத் தொடரில் விளையாடுவதற்கு ஏற்கெனவே உறுதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் டென்னிஸ் போட்டிகளையும் வெகுவாக பாதித்துள்ளது. கடந்த 8-ம் தேதி இந்தியன் வெல்ஸ் தொடர் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 6 வார காலத்துக்கு ஆடவர் டென்னிஸ் போட்டிகளை தள்ளி வைத்தது தொழில் முறை டென்னிஸ் சங்கம் (ஏடிபி). இதன்படி ஏப்பரல் 27 வரை அனைத்து ஏடிபி தொடர்களும், சாலஞ்சர் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டது.

அதேவேளையில் மகளிர் டென்னிஸ் போட்டிகள் மே 2 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் நடைபெற இருந்த போகோடா, குவாடலஜாரா, சார்லஸ்டன் தொடர்கள் ரத்தாகி உள்ளது. புடாபெஸ்டில் அடுத்த மாதம் நடைபெற இருந்த பெடரேஷன் கோப்பை தொடரின் இறுதி சுற்று தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT