விளையாட்டு

ரஞ்சி ட்ராபியில் எட்டப்பட்ட மைல்கல்கள்: புஜாரா, அபிநவ் முகுந்த், வினய் குமார், பார்த்திவ் சாதனைகள்

இரா.முத்துக்குமார்

ரஞ்சி டிராபி 2019-20 சீசனில் கோப்பையை முதல் முறையாக சவுராஷ்ட்ரா அணி வென்று வரலாறு படைத்தது, அந்த அணியின் கேப்டன் ஜெயதேவ் உனாட்கட்டின் பந்து வீச்சு இதில் பெரிய பங்களிப்பு செய்தது.

35 வயது பெங்கால் பேட்ஸ்மேன் அனுஷ்டுப் மஜும்தார் நடந்து முடிந்த ரஞ்சி சீசனில் லீக் ஆட்டங்களில் 284 ரன்களை 2 அரைசதங்களுடன் எடுத்திருந்தார், ஆனால் நாக் அவுட் பிரிவில் 5 இன்னிங்ஸ்களில் 2 சதங்கள் ஒரு அரைசதத்துடன் 105 ரன்கள் சராசரியுடன் 420 ரன்கள் குவித்தது ஒரு சாதனையாகும், குறிப்பாக காலிறுதி, அரையிறுதி சதங்கள், இறுதியில் அரைசதம் அடித்தார் மஜும்தார். கடைசியாக 2010-11 சீசனில் ராஜஸ்தான் கோப்பையை வென்ற போது அந்த அணியின் அசோக் மெனாரியா காலிறுதி, அரையிறுதி, இறுதி மூன்றிலும் சதமெடுத்து சாதனை புரிந்துள்ளார்.

இந்திய டெஸ்ட் வீரர் செடேஷ்வர் புஜாரா தன் முதல்தரக் கிரிக்கெட் வாழ்வில் 50வது சதமெடுத்தது இந்த சீசனில்தான். கர்நாடகா பந்து வீச்சை இவர் வறுத்தெடுத்து 248 ரன்களை ஒரு இன்னிங்ஸில் எடுத்த போது இந்தச் சாதனையை நிகழ்த்தினார். ரஞ்சியில் 50 அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் சதம் எடுத்த வீரர்கள் பட்டியலில் புஜாரா 9வதாக இடம்பெற்றுள்ளார். மேலும் முதல்தர கிரிக்கெட்டில் புஜாராவின் 13வது இரட்டைச் சதமாகும் இது. இந்த விஷயத்தில் புஜாரா நம்பர் 1 இந்திய பேட்ஸ்மென் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் இந்த ரஞ்சி சீசனில்தான் தமிழ்நாடு வீரர் அபிநவ் முகுந்த் 10,000 ரன்கள் மைல்கல்லை எட்டினார். இவர் 10,258 ரன்களை எடுத்துள்ளார். இதோடு 100 ரஞ்சி போட்டிகளில் ஆடிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். பரோடாவுக்கு எதிரான போட்டியில் 206 ரன்களை எடுத்த போது இந்த மைல்கல்லை எட்டினார் அபிநவ் முகுந்த்.

கர்நாடகாவின் லெஜண்ட் வினய் குமார் 442 விக்கெட்டுகளுடன் ரஞ்சியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களில் 4வது இடம்பெற்றுள்ளார். மேலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இவர் ஒரு வெற்றிகரமான வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனைக்குரியவர் ஆனார். இந்த ரஞ்சி சீசனில் மட்டும் வினய் குமார் 45 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

பார்த்திவ் படேல் விக்கெட் கீப்பராக ரஞ்சி ட்ராபியில் 300 டிஸ்மிசல்களுடன் 5வது விக்கெட் கீப்பர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். 103 போட்டிகளில் இவர் 305 விக்கெட்டுகள் விழ காரணமாக இருந்துள்ளார்.

SCROLL FOR NEXT