விளையாட்டு

சும்மா சும்மா ஷார்ட் பிட்ச் பவுலிங் ஆடவரவில்லை, பவுன்சரில் தடுமாறுகிறோம் என்று சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள்: ரஹானேயின் எரிச்சல்

செய்திப்பிரிவு

நடந்து முடிந்த நியூஸிலாந்துக்கு எதிரான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கீழ் நடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் நியூஸிலாந்து பவுலர்கள் ஷார்ட் பிட்ச் பவுலிங் யுக்தியை பிரமாதமாகப் பயன்படுத்தி இந்திய பேட்ஸ்மென்களின் பெரும்பாலும் முன்காலை நீட்டி ஆடும் ஆதிகாலப் பழக்கத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இந்திய அணிக்கு 2-0 ஒயிட் வாஷ் கொடுத்தனர்.

ஷார்ட் பிட்ச் பந்துகளில் ஆட்டமிழக்க வேண்டிய அவசியமில்லை, 2-3 ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி ஒரு ஃபுல் லெந்த் அவுட் ஸ்விங்கரோ, இன்ஸ்விங்கரோ வீசினால் ஒன்று எட்ஜ் அல்லது எல்.பி. என்று இந்திய வீரர்கள் காலங்காலமாக அவுட் ஆவது வழக்கம்., ஆனால் அல்ட்ரா -மாடர்ன் நவீன கோலி தலைமை இந்திய அணியிடம் இது செல்லுமா என்றுதான் பலரும் நினைத்தனர், ஆனால் ஒன்றும் மாறிவிடவில்லை, அதே போல்தான் அல்ட்ரா மாடர்ன் இந்திய வீரர்களும் ஆடுகின்றனர் என்பதை நியூஸிலந்து பவுலிங் நிரூபித்தது.

வெலிங்டனில் காற்று மற்றும் பிட்சின் இரண்டகத் தன்மை ஆகியவற்றை கோலி தோல்விக்குக் காரணமாகக் கூறினார், ஆனால் கிறைஸ்ட்சர்ச் பிட்ச் உண்மையாக நடந்து கொண்டது, இதிலும் நீல் வாக்னர், கைல் ஜேமிசன், ட்ரெண்ட் போல்ட், சவுத்தி கூட்டணி ஷார்ட் பிட்ச், ஸ்விங்கிற்கு இரையானார்கள், குறிப்பாக பிரித்வி ஷா, ரஹானே, கோலி, விஹாரி என்று கூறிக்கொண்டே போகலாம்.

இந்நிலையில் ரஹானே மும்பையில் ஊடகவியலாளர்களுக்கான பேட்டி ஒன்றில் இந்த விமர்சனங்கள் மீது எரிச்சலடைன்து கூறும்போது, “இந்த ஷார்ட் பிட்ச் பவுலிங் பற்றி ஊதிப்பெருக்கி வருகிறார்கள். சும்மா அதையே பேசிப் பேசி விமர்சனம் செய்கிறார்கள். 2018-ல் மெல்போர்னில் ஆடவில்லையா? ஆதிக்கம் செலுத்தவில்லையா? ஒரு ஆட்டத்தில் இப்படி ஆனதால் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு நாங்கள் மோசமான வீரர்களாகி விட மாட்டோம்.

நியூஸிலாந்து பவுலர்கள் உள்நாட்டு நிலைமைகளான காற்று, பிட்ச் ஆகியவற்றை திறம்பட பயன்படுத்தி கடினமான கோணங்களில் வீசினர்.

என்னைப் பொறுத்தமட்டில் நான் இந்த விவகாரம் குறித்து அதிகக் கவலையும் படப்போவதில்லை, இது தொடர்பாக ஆழமாக ஊடுருவிப் பார்க்கப்போவதும் இல்லை. டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பது ஒரு நேரத்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் கவனம் செலுத்தும் விஷயமாகும்.

ஒரு மோசமான போட்டி அல்லது 2 மோசமான போட்டிகள் அணியை மோசமானதாக்கி விடாது. கடந்த 3-4 ஆண்டுகளாக நன்றாகவே ஆடிவருகிறோம், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வெற்றியும் பெறுவோம் சில போட்டிகளை தோற்கவும் செய்வோம்” என்றார் ரஹானே.

SCROLL FOR NEXT