ஆசிய ஒலிம்பிக் தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் விகாஷ் கிருஷன் இறுதிசுற்றுக்கு முன்னேறினார். அதேவேளையில் அமித் பங்கால், லோவ்லினா ஆகியோர் அரை இறுதி சுற்றில் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றனர்.
ஆசிய அளவிலான ஒலிம்பிக் தகுதி சுற்று குத்துச்சண்டை ஜோர்டான் நாட்டின் அம்மான் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 69 கிலோ எடைப்பிரிவில் ஏற்கெனவே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்தியாவின் விகாஷ் கிருஷன்அரை இறுதி சுற்றில் கஜகஸ்தானின் அப்லைகான் ஜுசுபோவை எதிர்கொண்டார்.
இதில் விகாஷ் கிருஷன் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதி சுற்றில் நுழைந்தார். இதன் மூலம் விகாஷ் கிருஷன் குறைந்தது வெள்ளிப் பதக்கம் கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது. இறுதி சுற்றில் ஜோர்டானின் ஈஷாய் ஹுசைனுடன் மோதுகிறார் விகாஷ் கிருஷன்.
ஆடவருக்கான 52 கிலோ எடைப் பிரிவு அரை இறுதியில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தியாவின் அமித்பங்கால், சீனாவின் ஜியாங்குவான் ஹுவை எதிர்த்து விளையாடினார். இதில் அமித் பங்கால் 2-3 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அரை இறுதியில் தோல்வியை சந்தித்த அமித் பங்கால் வெண்கலப் பதக்கம் பெற்றார்.
இதேபோன்று மகளிருக்கான 69 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெய்னும் வெண்கலப் பதக்கம்கைப்பற்றினார். அரை இறுதியில் லோவ்லினா போர்கோஹெய்ன் 0-5 என்ற கணக்கில் சீனாவின்ஹாங் குவிடம் தோல்வியடைந்தார்.