பெங்கால் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சவுராஷ்டிரா அணி முதல் நாளில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது.
ராஜ்கோட்டில் நேற்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்த சவுராஷ்டிரா அணிக்கு ஹர்விக் தேசாய், அவி பரோட் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் ஷபாஸ் அகமது பந்தில் ஹர்விக் தேசாய் (38), ராமனிடம்கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதையடுத்து களமிறங்கிய விஷ்வராஜ் ஜடேஜா பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டார். மற்றொரு தொடக்க வீரரான அவி பரோட் 54 ரன்கள் எடுத்த நிலையில் ஆகாஷ் தீப் பந்தில் ரித்திமான் சாஹாவிடம் பிடிகொடுத்து வெளியேறினார். சீராக ரன்கள் சேர்த்த விஷ்வராஜ் ஜடேஜா 92 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்த நிலையில் ஆகாஷ் தீப் பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஜேக்சன் 14 ரன்களில் இஷான்போரெல் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அவரைத் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடி வரும் சேதேஷ்வர் புஜாரா களமிறங்கினார். 24 பந்துகளில் 5 ரன்கள் சேர்த்த புஜாரா, தொண்டை வலி மற்றும் காய்ச்சல் காரணமாக தொடர்ந்து பேட் செய்ய முடியாமல் களத்தில் இருந்து வெளியேறினார்.
இதையடுத்து களமிறங்கிய சேத்தன் சகாரியா (4), ஆகாஷ் தீப் பந்தில் நடையை கட்டினார்.
முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் சவுராஷ்டிரா அணி 80.5 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. அர்பித் வசவதா 29 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
பெங்கால் அணி சார்பில் ஆகாஷ் தீப் 3 விக்கெட்கள் கைப்பற்றினார். கைவசம் 4 விக்கெட்கள் இருக்க சவுராஷ்டிரா அணி இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.