உலக வெள்ளிப்பதக்கம் வென்றவரும் டாப் குத்துச் சண்டை வீரருமான இந்தியாவின் அமித் பங்கல் (53 கிலோ உடல் எடைப்பிரிவு) ஒலிம்பிக் போட்டிககளுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
அம்மானில் நடைபெற்று வரும் ஆசிய குத்துச் சண்டை தகுதிச் சுற்று போட்டிகளில் பிலிப்பைன்ஸ் நாட்டுக் குத்துச் சண்டை வீரர் கார்லோ பாலம் என்பவரை காலிறுதிச் சுற்றில் வீழ்த்தி இந்தியக் குத்துச் சண்டை வீரர் அமித் பங்கல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றார். ஆசிய சாம்பியன்ஷிப் தங்கம் வென்றவரான அமித் பங்கல் 2018-ல் அரையிறுதியில் இதே பிலிப்பைன்ஸ் வீரர் கார்லோ பாலமை தோற்கடித்துள்ளார்.
பிறகு 2019 உலக குத்துச் சண்டையில் அரையிறுதிச் சுற்றில் இவரை மீண்டும் ஒருமுறை வீழ்த்தி சாதனை புரிந்தார்.
ஆனால் முன்னாள் ஜூனியர் உலக சாம்பியன் சாக்ஷி சவுத்ரி (57 கிலோ), கொரியாவின் இம் ஏஜி என்பவரிடம் தோல்வி தழுவி ஒலிம்பிக் வாய்ப்பை நழுவ விட்டார். இவர் கொரிய வீராங்கனையிடம் 0-5 என்று தோல்வி தழுவினார்.
இன்னொரு காலிறுதியில் மற்றொரு இந்திய வீரர் மணீஷ் கவுஷிக் (63 கிலோ) மங்கோலியாவின் சின்சோரிக் பாத்தார்சுக் என்பவரை ஒலிம்பிக் தகுதிக்கான போட்டியில் சந்திக்கிறார்.