நடந்து முடிந்த ஜிம்பாபவேவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்று வென்றதையடுத்து 5 ஆண்டுகளாக வங்கதேச ஒருநாள் அணியை வழிநடத்தி வந்த மஷ்ரபே மோர்டஸா பதவியைத் துறந்தார்.
இதனையடுத்து அனுபவ தொடக்க வீரர் தமிம் இக்பாலை வங்கதேச ஒருநாள் போட்டி அணியின் கேப்டனாக அறிவித்தது வங்கதேச கிரிக்கெட் வாரியம்.
இவர் நீண்ட காலம் கேப்டனாக இருப்பார் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது, இதனையடுத்து இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பைக்கு அவர்தான் கேப்டனாக இருப்பார் என்று சூசகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இத்தகைய பெரிய பொறுப்பை என் மீது நம்பிக்கை வைத்து அளித்தது எனக்குக்கிடைத்த மிகப்பெரிய கவுரவம். வாரியம் ரசிகர்கள், நாடு எனக்கு ஆதரவளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார் தமிம் இக்பால்.
கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரேயொரு ஒருநாள் போட்டி ஏப்ரல் 1-ல் நடைபெறுகிறது. இது தமிம் இக்பாலின் கேப்டன்சி அறிமுகமாக இருக்கும்.
மஹமுதுல்லா, முஷிபிகுர் ரஹிம், ஷாகிப் அல் ஹசன் ஆகியோரை மீறி தமிம் இக்பாலுக்கு கேப்டன் பதவி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.