மகளிர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மெல்பர்ன் நகரில் மோதுகின்றன.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிஒரு தோல்வியை கூட சந்திக்காமல் இறுதி சுற்றில் நுழைந்துள்ளது. லீக் சுற்றின் தொடக்க ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை அற்புதமாக தொடங்கிய இந்திய அணி அதன் பின்னர் வங்கதேசம், நியூஸிலாந்து, இலங்கை அணிகளை பந்தாடியது.
இங்கிலாந்து அணிக்கு எதிரானஅரை இறுதி ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் லீக் சுற்றில் அதிக வெற்றிகள் பெற்றதன் அடிப்படையில் முதன் முறையாக இந்திய அணி இறுதி சுற்றில் கால்பதித்தது. 16 வயதான ஷஃபாலிவர்மாவின் அதிரடி பேட்டிங், சுழற்பந்து தாக்குதலின் தொடர்ச்சியான உயர்மட்ட செயல் திறன் ஆகியவை இந்திய அணியின் வெற்றிக்கு பாரிய பங்களிப்பை வழங்கின.
இருப்பினும், இந்திய அணிமுதல் முறையாக ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டுமானால் நட்சத்திர வீரங்கனைகளான ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் ஆகியோரிடமிருந்து மேம்பட்ட திறன் வெளிப்பட வேண்டும். அதேவேளையில் நடுவரிசை பேட்டிங்கும் சிறந்த பங்களிப்பை வழங்குவது அவசியம். எல்லாவற்றுக்கும் மேலாக நெருக்கடியான தருணங்களை சிறப்பாக கையாள்வதிலும் இந்திய அணி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
ஆஸ்திரேலிய அணியானது அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதி சுற்றில் கால்பதித்தது. அந்த அணி6-வது முறையாக இறுதி போட்டியில் விளையாடுகிறது. இதனால் நெருக்கடியான சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பதை ஆஸ்திரேலிய அணி நன்கு அறிந்திருக்கக்கூடும்.
இந்த விஷயத்தில் இந்திய அணி கடந்த 2017-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி, 2018-ம் ஆண்டு டி 20 உலகக்கோப்பை அரை இறுதி ஆட்டம் ஆகியவற்றில் கரைசேர தவறியது. இந்த இரு ஆட்டங்களிலும் கடைசி தருணங்களில் பதற்றம் அடைந்த இந்திய அணி, இங்கிலாந்திடம் வீழ்ந்திருந்தது.
இதனால் கடந்த காலங்களில் இருந்து இந்திய அணி பாடம்கற்றிருக்கும் என்றே கருதப்படுகிறது. இந்தத் தொடரில் 161 ரன்கள் சேர்த்துள்ள ஷஃபாலி வர்மாமீண்டும் ஒரு முறை அதிரடி தொடக்கம் கொடுப்பார் என ஒட்டுமொத்த அணியும் பெரிதும் எதிர்பார்க்கிறது. அனுபவ வீராங்கனையான ஸ்மிருதி மந்தனாவும் மட்டையை சுழற்றக்கூடும். பார்மின்றி தவித்து வரும் ஹர்மன்பிரீத் கவுர் அணிக்கு சிறப்பு சேர்க்க இதைவிட சிறந்த தருணம் கிடைக்காது.
ஒருவேளை ஷஃபாலி வர்மா சிறப்பான தொடக்கம் கொடுக்கத் தவறினால் இந்திய அணி தடுமாற்றத்தை சந்திக்க நேரிடும். ஏனெனில் இந்தத் தொடரில் இந்திய அணியின் நடுவரிசை, பின்வரிசை பேட்டிங் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. லீக் சுற்றில் இந்திய அணி ஒரு முறை கூட 150 ரன்களை எட்டிப்பார்க்கவில்லை. ஆனால் அற்புதமான பந்து வீச்சால் வெற்றிகள் சாத்தியமானது.
இந்தத் தொடரில் 9 விக்கெட்கள் வீழ்த்தி உள்ள சுழற்பந்து வீச்சு வீராங்கனையான பூணம் யாதவ் மீண்டும் ஒரு முறை ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு அழுத்தம் கொடுக்க ஆயத்தமாக உள்ளார். அவருடன் ஷிகா பாண்டே, ராதா யாதவ், ராஜேஷ்வரி கெய்க்வாட் ஆகியோரும் பந்து வீச்சு துறைக்கு பலம் சேர்க்கக்கூடும்.
ஆஸ்திரேலிய அணியில் 181 ரன்கள் குவித்துள்ள பெத் மூனி, 161 ரன்கள் சேர்த்துள்ள அலிசா ஹீலி ஆகியோர் இந்திய பந்து வீச்சு துறைக்கு சவால் அளிக்கக்கூடும். அதேவேளையில் தொடரில் 9 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள வேகப்பந்து வீச்சு வீராங்கனையான மேகன் ஷட், சுழற்பந்து வீராங்கனையான ஜெஸ் ஜோனாசென் ஆகியோர் இந்திய பேட்டிங் வரிசைக்கு நெருக்கடி தரக்கூடும்.
இறுதிப் போட்டிக்கு ஏற்கெனவே 75,000-க்கும் மேற்பட்டடிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. மேலும் இது பெண்கள் கிரிக்கெட்டில் முன்னோடியில்லாத வகையில் 90,000 டிக்கெட்கள் வரைசெல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேரம்: பிற்பகல் 12.30
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்