விளையாட்டு

அதிர்ஷ்டம் இல்லாத முன்னாள் இந்திய டெஸ்ட், சாம்பியன் ரஞ்சி வீரர் வாசிம் ஜாபர் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு

செய்திப்பிரிவு

இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகள் 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடிய தொடக்க வீரர் வாசிம் ஜாஃபர் உள்நாட்டு கிரிக்கெட்டில் சாம்பியன் ஆவார், இவர் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மும்பையில் தன் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கிய வாசிம் ஜாஃபர் 2015-16-ல் விதர்பாவுக்கு மாறினார். மும்பை அணியை தன் தலைமையில் 38 மற்றும் 39வது ரஞ்சி சாம்பியன் பட்டத்துக்கு இட்டு சென்ற சிறந்த கேப்டனுமாவார் வாசிம் ஜாஃபர்.

2010-ல் மேற்கு மண்டல அணி இவர் தலைமையில் துலீப் கோப்பையையும் வென்றது. கடந்த ஆண்டு 150 ரஞ்சி போட்டிகளில் ஆடிய ஒரே சாம்பியன் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். கடந்த ரஞ்சி சீசனில் 1037 ரன்களைக் குவித்த ஜாஃபருக்கு இப்போதைய வயது 41 என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக 260 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஜாபர் 19, 410 ரன்களை எடுத்தார். சராசரி 50.67. 57 சதங்கள், 91 அரைசதங்கள். 314 அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர்.

31 டெஸ்ட் போட்டிகளில் 1944 ரன்களை 5 சதங்கள் 11 அரைசதங்கள் அடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸில் செயிண்ட் ஜான்ஸில் ஜாஃபர் அதிகபட்சமாக 2006ம் ஆண்டு 212 ரன்களைக் குவித்தார். 2 ஒருநாள் போட்டிகளிலும் ஆடியுள்ளார்.

துல்லியமான பேட்டிங் உத்திகள் கொண்ட வீரர் என்று பண்டிதர்களால் கொண்டாடப்பட்ட ஒரு வீரர், இந்திய அணியில் இவருக்கான வாய்ப்பு சரியாக அளிக்கப்படவில்லை என்பதே பலரது கருத்தாக இருந்தது. ஒரு சாம்பியன் ரஞ்சி வீரர், பிரமாதமான கேப்டன் இந்தியாவுக்காக ஆடியது 31 டெஸ்ட்களே என்பது இந்திய கிரிக்கெட் செட்-அப்-ன் தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்ளது.

இங்கிலாந்தில் கிரேம் ஹிக் என்பவர் அளப்பரிய திறமை கொண்டவர் ஆனால் சர்வதேச அரங்கில் போதிய வாய்ப்புகள் கிட்டாதவர், அந்த வரிசையில் வாசிம் ஜாஃபரைச் சேர்க்கலாம். ஆனால் அமோல் மஜூம்தார் என்ற வீரர் சச்சின், அளவுக்குப் பேசப்பட்டவர் ஒரு சர்வதேசப் போட்டியில் கூட ஆடாமல் ஓய்வு பெற்றதும் இந்த நாட்டில்தான் நடக்கும்.

SCROLL FOR NEXT