விளையாட்டு

முழங்காலில்  7 அறுவை சிகிச்சையுடன் ஆடிய மஷ்ரபே மோர்டசா: ஒருநாள் கேப்டன்சியைத் துறந்தார்

செய்திப்பிரிவு

வங்கதேசக் கிரிக்கெட்டுக்காக அயராது உழைத்து ஆடிய கடின உழைப்பாளி என்று பெயர் எடுத்த வேகப்பந்து வீச்சாளர் மஷ்ரபே மோர்டசா ஒருநாள் அணியின் கேப்டன்சி பதவியைத் துறப்பதாக அறிவித்துள்ளார்.

இன்று (வெள்ளி) ஜிம்பாபவேவுக்கு எதிராக நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியே இவரது கேப்டன்சியின் கடைசி போட்டியாகும். ஆனால் வீரராக அணியில் நீடிப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார், மோர்டசாவுக்கு வயது 36. ஏற்கெனவே இந்த ஒருநாள் தொடரை 2-0 என்று வென்று விட்டது.

வங்கதேச மத்திய வீரர்கள் ஒப்பந்தத்தையே இளம் வீரர்கள் வரவேண்டும் என்பதற்காக உதறியவர் மோர்டசா.

“நேற்று வரை யோசிக்கவில்லை, ஆனால் இன்று காலை போதும் என்று முடிவெடுத்து விட்டேன்” என்றார் மோர்டசா.

முழங்கால்களில் 7 அறுவை சிகிச்சைகள் நடைபெற்ற பிறகும் நீண்டகால கிரிக்கெட் வாழ்க்கை அவருக்கு அமைந்தது. வங்கதேச ரசிகர்களினால் அவர் மிகவும் மதிக்கப்படுபவர். ஏனெனில் அடிவாங்கும் அணி என்பதிலிருந்து மதிக்கக் கூடிய ஒரு அணியாக ஒருநாள் அரங்கில் வங்கதேசத்தை தலை நிமிர்த்தியவர்.

89 போட்டிகளில் இவர் தலைமையில் 47 போட்டிகளில் வங்கதேசம் வென்றது, ஆகவே வங்கதேசத்தின் சிறந்த ஒருநாள் கேப்டன் இவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

டி20 சர்வதேசப் போட்டிகளில் 10 போட்டிகளை இவர் தலைமையில் வென்ற பிறகு 2017-ல் டி20யிலிருந்து ஓய்வு பெற்றார். 2009க்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் ஆடவில்லை.

SCROLL FOR NEXT