விளையாட்டு

தொடரை வெல்ல கோலி படை தீவிரம்: இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

பிடிஐ

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது மற்றும் கடைசி போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று தொடங்குகிறது.

கடைசியாக 1993-ல் இலங்கை மண்ணில் அந்நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றுள்ளது இந்தியா. அதன்பிறகு கடந்த 22 ஆண்டுகளாக வெல்லாத நிலையில், இந்த டெஸ்ட் போட்டியில் வென்று அந்த குறையைத் தீர்ப்பதில் தீவிரமாக உள்ளது கோலி தலைமையிலான இளம் இந்திய அணி.

கடந்த போட்டியில் 278 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் கேப்டனாக முதல் வெற்றியைப் பதிவு செய்த கோலி, இந்தப் போட்டியிலும் இலங்கையை வீழ்த்தி கேப்டனாக ஒரு தொடரை வெல்வதில் மிகுந்த முனைப்போடு இருக்கிறார். 5 பவுலர்களுடன் களமிறங்குவது என்ற கோலியின் உத்திக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இதனால் கடந்த இரு போட்டிகளிலும் இலங்கையின் 40 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடிந்தது.

நமன் ஓஜா அறிமுகம்

இந்திய அணியைப் பொறுத்த வரையில் காயம் காரணமாக முரளி விஜய் விலகிவிட்டதால், இந்தப் போட்டியில் கே.எல்.ராகுலுடன் தொடக்க வீரராக சேதேஷ்வர் புஜாரா களமிறங்குகிறார். காயமடைந்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹாவுக்குப் பதிலாக நமன் ஓஜா களமிறங்குகிறார். ஓஜாவுக்கு இது அறிமுக டெஸ்ட் போட்டியாகும். மற்றபடி அணியில் எந்த மாற்றமும் இருக்காது.

இந்தத் தொடரில் இந்திய அணியின் தொடக்க ஜோடிகள் 3-வது முறையாக மாற்றப்பட்டுள்ளன. எனவே இந்தப் போட்டியில் புஜாரா-ராகுல் ஜோடி எப்படி ஆடுகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனினும் கடந்த போட்டியில் சதமடித்த கே.எல்.ராகுல், இந்தப் போட்டியிலும் இந்திய அணியின் ரன் குவிப்பில் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிடில் ஆர்டரில் அஜிங்க்ய ரஹானே, கேப்டன் கோலி, ரோஹித் சர்மா, நமன் ஓஜா, ஸ்டூவர்ட் பின்னி ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். இவர்களில் ரஹானே, கோலி, ரோஹித் ஆகியோர் பார்மில் இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகும்.

அச்சுறுத்தும் அஸ்வின்

வேகப்பந்து வீச்சில் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஸ்டூவர்ட் பின்னி கூட்டணியை நம்பியுள்ளது இந்தியா. சுழற்பந்து வீச்சில் அஸ்வின், அமித் மிஸ்ரா கூட்டணி இந்திய அணியின் துருப்பு சீட்டாகத் திகழ்கிறது. கடந்த இரு போட்டிகளில் அஸ்வின் 17 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். அமித் மிஸ்ரா 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனவே 3-வது போட்டியிலும் இந்தக் கூட்டணி இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கவலையளிக்கும் தொடக்கம்

இலங்கை அணியின் மூத்த பேட்ஸ்மேனான குமார் சங்ககாரா கடந்த போட்டியோடு ஓய்வு பெற்றுவிட்டது அந்த அணியில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவருக்குப் பதிலாக இந்தப் போட்டியில் உபுல் தரங்கா இடம்பெறுவார் என தெரிகிறது. எனினும் குமார் சங்ககாரா விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்புவது கடினமாகும்.

இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் கருணாரத்னே-ஜே.கே.சில்வா ஆகியோர் இதுவரை அந்த அணிக்கு நல்ல தொடக்கம் ஏற்படுத்தித் தராதது கவலையளிப்பதாக உள்ளது. மிடில் ஆர்டரைப் பொறுத்தவரையில் திரிமானி, கேப்டன் மேத்யூஸ், தினேஷ் சன்டிமல் ஆகியோரையே நம்பியுள்ளது இலங்கை. இவர்கள் 3 பேர் மட்டுமே இந்தத் தொடரில் சிறப்பாக ஆடி ரன் குவித்துள்ளனர். ஜெகன் முபாரக்கிற்கு பதிலாக குசல் பெரேரா இடம்பெறுவார் என தெரிகிறது. அவர் இடம்பெறும்பட்சத்தில் விக்கெட் கீப்பர் பணியில் இருந்து தினேஷ் சன்டிமல் விடுவிக்கப்படுவார்.

தரின்டு கவுஷல் சந்தேகம்

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் நுவான் பிரதீப் காயத்திலிருந்து மீண்டுவிட்டதால் இந்தப் போட்டியில் களமிறங்குகிறார். அவர், தமிகா பிரசாத்துடன் இணைந்து வேகப்பந்து வீச்சை கவனிக்கவுள்ளார். சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ரங்கனா ஹெராத் பலம் சேர்க்கிறார். மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான தரின்டு கவுஷல் இடம்பெறுவது சந்தேகமே. அவர் இடம்பெறாதபட்சத்தில் தில்ருவான் பெரேரா சேர்க்கப்படலாம்.

இந்தியா (உத்தேச லெவன்)

சேதேஷ்வர் புஜாரா, கே.எல்.ராகுல், அஜிங்க்ய ரஹானே, விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, நமன் ஓஜா (விக்கெட் கீப்பர்), ஸ்டூவர்ட் பின்னி, அஸ்வின், அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ்.

இலங்கை (உத்தேச லெவன்)

திமுத் கருணாரத்னே, கவுஷல் சில்வா, உபுல் தரங்கா, லஹிரு திரிமானி, ஏஞ்செலோ மேத்யூஸ் (கேப்டன்), தினேஷ் சன்டிமல், குசல் பெரேரா (விக்கெட் கீப்பர்), தமிகா பிரசாத், ரங்கனா ஹெராத், தரின்டு கவுஷல்/தில்ருவான் பெரேரா, நுவான் பிரதீப்.

மைதானம் எப்படி?

இந்தப் போட்டி சின்ஹலேஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறுகிறது. இங்கு கடைசியாக நடந்த 5 போட்டிகளில் 4 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. முதல் இரு செசன்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என தெரிகிறது. அதன்பிறகு சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறலாம்.

இந்தியாவும், இலங்கையும் இங்கு 7 போட்டிகளில் மோதியுள்ளன. இலங்கை இரு வெற்றிகளையும், இந்தியா ஒரு வெற்றியையும் பதிவு செய்துள்ளன. எஞ்சிய 4 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

மிரட்டும் மழை

கடந்த சில நாட்களாக கொழும்பில் மதிய வேளைகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் இந்தப் போட்டி அவ்வப்போது மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. முதல் நாளான இன்று 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எஞ்சிய 4 நாட்களும் 80 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

150-ஐ நோக்கி அஸ்வின்…

இந்தத் தொடரில் இதுவரை 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் அஸ்வின் இன்று தனது 28-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறார். அவர் இன்னும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தும்பட்சத்தில் டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய 3-வது நபர் என்ற சாதனையை நியூஸிலாந்தின் கிளாரி கிரிம்மெட்டுடன் பகிர்ந்து கொள்வார். இங்கிலாந்தின் சிட்னி பர்ன்ஸ் (24 போட்டி), பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் (27 போட்டி) ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர்.

அறிமுகம் புதுமுகம்

இந்திய தரப்பில் விக்கெட் கீப்பர் நமன் ஓஜா அறிமுகப் போட்டியில் களமிறங்குகிறார். இலங்கை அணியில் குசல் பெரேரா அறிமுக விக்கெட் கீப்பராக களமிறங்குவார் என தெரிகிறது. அப்படி நடக்கும்பட்சத்தில் இரு அணிகளின் விக்கெட் கீப்பர்களும் ஒரே போட்டியில் அறிமுக வீரர்களாக களமிறங்குவது இது 14-வது முறையாக அமையும்.

சங்ககாராவின் இடத்தை நிரப்புவது கடினம்: மேத்யூஸ்

இலங்கை கேப்டன் மேத்யூஸ் கூறுகையில், “சங்ககாராவின் ஓய்வுக்குப் பிறகு பார்த்தால் தற்போதுள்ள வீரர்கள் யாருக்கும் அதிக அளவில் டெஸ்ட் போட்டியில் ஆடிய அனுபவம் இல்லை. அவர் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப நீண்ட நாட்கள் ஆகும். ஆனால் இப்போது நாங்கள் அனைவரும் ஓர் அணியாக இணைந்து அந்த இடத்தை நிரப்ப வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.

சங்ககாராவுக்குப் பதிலாக அணியில் இடம்பெறவுள்ள அடுத்த வீரர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த மேத்யூஸ், “நிச்சயமாக தரங்காதான். அவர் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய கடைசி போட்டியில் முறையே 46 மற்றும் 48 ரன்கள் குவித்தார். இந்தத் தொடரின் முதல் இரு போட்டிகளில் சங்ககாரா ஆடியதால்தான் தரங்கா வெளியில் இருந்தார். நல்ல பேட்டிங் வரிசையைக் கண்டுபிடிக்க முயற்சிப்போம். பேட்டிங் வரிசை குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை” என்றார்.

போட்டி நேரம்: காலை 10.00

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

SCROLL FOR NEXT