விளையாட்டு

மகளிர் டி 20 உலகக் கோப்பை- அரை இறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை சந்திக்கிறது

செய்திப்பிரிவு

மகளிர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி சுற்றில் இந்திய அணி, இங்கிலாந்துடன் நாளை மோதுகிறது.

மகளிர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் நேற்று தென் ஆப்பிரிக்கா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையே நடைபெற இருந்த ஆட்டம் மழை காரணமாக ஒருபந்துகூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இதனால் லீக் சுற்றில் தனது பிரிவில் 7 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்க அணி முதலிடம் பிடித்தது. இதே பிரிவில் இங்கிலாந்து அணி 6 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்துள்ளது. இதன் மூலம் இரு அணிகளும் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறின.

சிட்னி நகரில் நாளை நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியானது இந்தியாவுடன் மோதுகிறது. 2-வது அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

இந்திய அணி லீக் சுற்றில் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று முதல் அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் இங்கிலாந்து அணி லீக் சுற்றில் 3 வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்தது.

கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரிலும் இந்தியா, இங்கிலாந்து அணியுடன் மோதியிருந்தது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. ஆனால் அந்த அணி இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்திருந்தது.

SCROLL FOR NEXT