கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் எண்ணமில்லை என ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.
ஆஷஸ் தொடரில் விளையாடி வரும் கிளார்க், ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 6 இன்னிங்ஸ்களில் 94 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் அவர் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறார். இங்கிலாந் துக்கு எதிரான ஆஷஸ் தொட ரோடு கிரிக்கெட்டிலிருந்து கிளார்க் ஓய்வு பெறலாம் என ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலை அதை மறுத்துள்ள கிளார்க் மேலும் கூறியிருப்பதாவது:
என்னுடைய ஆட்டம் குறித்து தற்போது முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள் சரியானதுதான். ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக நான் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. எனது ஆட்டத்தில் ரன் குவிக்கும் வேட்கை இல்லை. நான் இந்தத் தொடரோடு ஓய்வுபெறக்கூடும் என்பதை என்னுடைய கண்களில் பார்த்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். அவை முற்றிலும் தவறானது. யார் வேண்டுமானாலும் என்னுடைய ஆட்டம் குறித்து விமர்சிக்கலாம்.
ஆனால் கிரிக்கெட் விளையாடும் எனது விருப்பம் குறித்து யாரும் கருத்து தெரிவிக்க முடியாது. நான் பயிற்சியை முடித்துக் கொண்டுதான் இங்கிருந்து கிளம்புகிறேன். நான் ரன் குவிக்கும் வேட்கை இல்லாமல் இருக்கிறேன் என கூறாதீர்கள். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் எண்ணமில்லை. கிறிஸ் ரோஜர்ஸ் தனது 2-வது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்காக 35 வயது வரை காத்திருந்தார். எனக்கு இப்போது 34 வயதுதான் ஆகிறது. அதனால் இந்தத் தொடருக்குப் பிறகும் ஆஸ்திரேலியாவுக்காக தொடர்ந்து விளையாட விரும்புகிறேன்.
எனினும் எனது செயல்பாட்டின்படி மற்றவர்களைப்போல் நானும் விமர்சிக்கப்படலாம். எனது ரன் குவிக்கும் வேட்கை குறித்து கேள்வியெழுப்புவது என்னை கொல்வதற்கு சமமாகும். ஏனெனில் ஒவ்வொரு நாளும் சிறப்பாக ஆடுவதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்து 13 ஆண்டுகள் ஆன பிறகும்கூட, எனது ஆட்டத்தை மேம்படுத்துவது குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.