விளையாட்டு

கேலோ இந்தியா விளையாட்டு: தங்கம் வென்றார் டூட்டி சந்த்

செய்திப்பிரிவு

இந்தியாவின் மிக வேகமாக வீராங்கனை என்று பெயர் பெற்றுள்ள டூட்டி சந்த், கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியின் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார்.

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டத்தில் அவர் 23.66 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்தார். அவர் ஒடிசாவிலுள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்டிரியல் டெக்னாலஜி (கேஐஐடி) சார்பில் பங்கேற்றார். இதே பிரிவில் மும்பை பல்கலை.யின் கீர்த்தி விஜய் 2-வது இடத்தையும், உத்கல் பல்கலைக்கழகத்தின் தீபா மகாபாத்ரா 3-வது இடத்தையும் பிடித்தனர். இதுகுறித்து டூட்டி சந்த் கூறியதாவது: 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வெல்வது மிகவும் மகிழ்ச்சியான விஷயமாகும். 200 மீட்டர் ஓட்டத்தை விட, 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்பது சவாலான விஷயம்.

கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள், ஒடிசாவில் நடத்தப்படுவது மிகவும் சிறப்பான ஒன்றாகும். ஆசிய விளையாட்டுப் போட்டிகளை போன்று இது இங்கு நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். - பிடிஐ

SCROLL FOR NEXT