ஊக்கமருந்து விவகாரம் காரணமாக சீனாவின் பிரபல நீச்சல் வீரர் சுன் யாங்குக்கு 8 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர் ஒலிம்பிக் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கம் பெற்றவர்.
விளையாட்டு வீரர்கள் அனைவரும் ஊக்க மருந்து பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என்று உலக ஊக்க மருந்து தடுப்பு (டபிள்யூஏடிஏ) அமைப்பு தெரிவித்துள்ளது. அவர்கள் கேட்கும்போது ரத்தம், சிறுநீர் மாதிரிகளைத் தரவேண்டும் என்பது விதியாகும். ஆனால் 2018-ம் ஆண்டின்போது சுன் யாங் தனது ரத்தம், சிறுநீர் மாதிரிகளைத் தர மறுத்துவிட்டார்.
இதையடுத்து அவருக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து சுவிட்சர்லாந்திலுள்ள விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் (சிஏஎஸ்) வழக்கு நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நேற்று அதன் தீர்ப்பு வெளியானது. அதன்படி சுன் யாங்குக்கு, உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு விதித்த 8 ஆண்டு தடை செல்லும் என்று நடுவர் நீதிமன்றம் அறிவித்தது.