ராஜஸ்தான் அணிக்கும் பெங்கால் அணிக்கும் நடைபெற்ற ரஞ்சி ட்ராபி போட்டியில் பெங்கால் அணியை பென் ஸ்டோக்ஸ் பாணியில் வெற்றி பெறச் செய்த ஷாபாஸ் அகமெட் ‘தனக்கு உண்மையில் பென் ஸ்டோக்ஸ் போல் ஆகவேண்டும்’ என்ற கனவு இருப்பதாகத் தெரிவித்தார்.
இடது கை பேட்ஸ்மெனான ஷாபாஸ் அகமெட், பென் ஸ்டோக்ஸ் போல் அச்சுறுத்தும் வேகப்பந்து வீச்சாளர் அல்ல, மாறாக இடது கை ஸ்பின்னர்.
ஜெய்ப்பூரில் இந்த மாதத்தில் நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் பெங்கால் அணிக்கு வெற்றி இலக்கு 320 ரன்கள். 5 விக்கெட்டுகள் விழுந்த நிலையில் 127 ரன்கள் வெற்றிக்குத் தேவை. அனுபவ வீரர் அனுஸ்துப் மஜும்தார் ஒரு முனையில் இருந்தார், ஆனால் அவரும் 208 ரன்கள் இருந்த போது 6வது விக்கெட்டாக பெவிலியன் திரும்ப பொறுப்பு ஷாபாஸ் அகமெட் கையில் இருந்தது.
ஷாபாஸ் அகமெட் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 61 நாட் அவுட் என்று அந்த நிலையிலிருந்து வெற்றி பெறச் செய்தார், அதுவும் வெற்றிக்கான ஷாட் பென் ஸ்டோக்ஸ் பாணி சிக்சர்தான்.
கீழ்வரிசை வீரர்களை வைத்துக் கொண்டு 208/6 என்ற நிலையிலிருந்து வெற்றிக்கான 112 ரன்களை கீழ்வரிசை வீரர்களை வைத்துக் கொண்டு அவர்களை ஊக்கப்படுத்தி ஆட வைத்து வெற்றிக்கு இட்டுச் சென்றார் முதலில் நந்தி என்பவருடன் 29 ரன்கள் கூட்டணி அமைத்தார். பிறகு ஆகாஷ்தீப் என்ற வேகப்பந்து வீச்சாளருடன் 50 ரன்கள் கூட்டணி அமைத்தார். நம்பர் 10 வீரர் முகேஷ் குமார் 20 பந்துகள் தாக்குப் பிடிக்க ஷாபாஸ் அகமெட் சிக்சர் அடித்து வெற்றிக்கு இட்டுச் சென்றார்.
இந்த ஷாபாஸ் அகமெடைத் தான் முன்னாள் பெங்கால், இந்திய வீரர் அருண் லால், “அணியின் இதயமே இவர்தான் இப்போது” என்று ஷாபாஸை புகழ்ந்தார்.
பந்து வீச்சில் பஞ்சாப் அணிக்கு எதிராக 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதால் பெங்கால் அணி காலிறுதிக்குத் தகுதி பெற்றது. பிறகு ஒடிஷாவுடன் 46/5 என்ற நிலையிலிருந்து அரைசதம் அடித்தார் ஷாபாஸ், இந்தப் போட்டியில் 2 அரைசதங்கள்.
ஷாபாஸ் அகமெட் தன் ஆட்டம் பற்றி கூறும்போது, “விவிஎஸ் லஷ்மண் நான் ஜடேஜா இந்திய அணிக்காக எப்படி ஆடுகிறாரோ அப்படி நான் ஆடவேண்டும் என்றார், இது எனக்குக் கிடைத்த பெரிய பெருமையாகும். ஆனால் நான் பென் ஸ்டோக்ஸ் ஆகவே விரும்புகிறேன். எந்தச் சூழ்நிலையிலும் அணியை வெற்றிக்கு இட்டுச் செல்லும் நம்பகத்தன்மை உள்ள பேட்ஸ்மெனாக இருக்க விரும்புகிறேன்” என்றார் இந்த பெங்காலின் பென் ஸ்டோக்ஸ்