தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி 20 கிரிக்கெட் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணியினர் கோப்பையுடன் கொடுத்த உற்சாக போஸ். 
விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடரை வென்றது ஆஸ்திரேலியா

செய்திப்பிரிவு

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3-வது டி 20 கிரிக்கெட் ஆட்டத்தில் 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.

தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற கடைசி டி 20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் 37 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 57 ரன்களும், கேப்டன் ஆரோன் பின்ச் 37 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 55 ரன்களும் விளாசினர்.

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 11.3 ஓவர்களில் 120 ரன்களை வேட்டையாடியது. மேத்யூ வேட் 10, மிட்செல் மார்ஷ் 19, அலெக்ஸ் காரே 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதிகட்ட ஓவர்களில் ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக விளையாடி 15 பந்துகளில், 2 சிக்ஸர்களுடன் 30 ரன்கள் சேர்த்தார்.

194 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி மிட்செல் ஸ்டார்க், ஆஷ்டன் அகர், ஆடம் ஸம்பா ஆகியோரது பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 15.3 ஓவர்களில் 96 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக வான் டெர் டஸ்சென் 24, ஹன்ரிச் கிளாசென் 22, டேவிட் மில்லர் 15, டுவைன்பிரிட்டோரியஸ் 11 ரன்கள் சேர்த்தனர்.

கேப்டன் குயிண்டன் டி காக் (5), டுபிளெஸ்ஸிஸ் (5) உட்பட மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்களை எட்டவில்லை. ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3, ஆஷ்டன் அகர் 3, ஆடம் ஸம்பா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. ஆட்ட நாயகனாக மிட்செல் ஸ்டார்க், தொடர் நாயகனாக ஆரோன் பின்ச் தேர்வு செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT