விளையாட்டு

முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: அகர்வால் சதம்; இந்தியா அபார வெற்றி

செய்திப்பிரிவு

ஏ அணிகள் இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியா சத்தில் தென் ஆப்பிரிக்காவைத் தோற்கடித்தது இந்தியா. இதன்மூலம் இந்திய அணிக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.

சென்னையில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஹென்ரிக்ஸ் 1 ரன்னில் ஆட்ட மிழந்தபோதும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான குயின்டன் டி காக் சதமடித்தார். 124 பந்துகளைச் சந்தித்த அவர் 1 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 108 ரன்கள் எடுத்தார்.

பின்வரிசையில் விக்கெட் கீப்பர் டேன் விலாஸ் 50 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 50 ரன்களும், ரமீலா 26 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 50 ஓவர்களில் 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது தென் ஆப்பிரிக்கா. இந்தியத் தரப்பில் ரிஷி தவன் 4 விக்கெட்டுகளையும், சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 219

பின்னர் ஆடிய இந்திய அணிக்கு மயங்க் அகர்வால்-கேப்டன் உன்முக்த் சந்த் ஜோடி அசத்தலான தொடக்கம் ஏற்படுத் தியது. அகர்வால் 62 பந்துகளில் அரைசதமடிக்க, இரண்டு முறை ஆட்டமிழப்பதிலிருந்து தப்பிய உன்முக்த் சந்த் 64 பந்துகளில் அரைசதம் கண்டார்.

இதன்பிறகு அதிரடியாக ஆடிய மயங்க் அகர்வால் 100 பந்துகளில் சதமடிக்க, இந்தியா 200 ரன்களைக் கடந்தது. இந்தியா 219 ரன்களை எட்டியபோது உன்முக்த் சந்த் ஆட்டமிழந்தார். அவர் 94 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 90 ரன்கள் குவித்தார். இதையடுத்து மணீஷ் பாண்டே களமிறங்க, மறுமுனையில் வேகம் காட்டிய அகர்வால் 122 பந்துகளில் 1 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 130 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் 37.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது இந்தியா. மணீஷ் பாண்டே 9, கருண் நாயர் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு 5 புள்ளிகள் கிடைத்தன.

SCROLL FOR NEXT