10-வது இந்தியா ஓபன் பாட்மிண்டன் தொடர் மார்ச் 24 முதல் 29-ம் தேதி வரை டெல்லியில் நடைபெறும் என இந்திய பாட்மிண்டன் சங்கம் தெரிவித்துள்ளது.
சுமார் ரூ.2.86 கோடி பரிசுத் தொகை கொண்ட இந்தத் தொடரின் மகளிர் பிரிவில் உலகத் தரவரிசையில் முதல்10 இடங்களுக்குள் உள்ள 8 வீராங்கனைகளும், ஆடவர்பிரிவில் முதல் 10 இடங்களுக்குள் உள்ள 3 வீரர்களும் கலந்து கொள்கின்றனர்.
சீனாவைச் சேர்ந்த நட்சத்திரங்களான சென்யூஃபி, ஹீ பிங்ஜியாவோ ஆகியோரும் இந்தத் தொடரில் பங்கேற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானின் அகானே யமகுச்சி, ஸ்பெயினின் கரோலினா மரின், கொரியாவின் அன் சி யங், கனடாவின் மிட்செலி லி, தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனான், இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
ஆடவர் பிரிவில் டென்மார்க்கின் விக்டர் ஆக்ஸல்சென், இந்தியாவின் சாய் பிரணீத், கிடாம்பி காந்த், பாருபள்ளி காஷ்யப், ஹெச்எஸ் பிரனோய், சவுரப் வர்மா, சமீர் வர்மா, லக்சயா சென், சீனாவின் ஷி யூ குயி, கொரியாவின் சன் வான் ஹோ, தாய்லாந்தின் குன்லவுத் விதித்சரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக நடைபெறும் இந்தத்தொடரானது வீரர், வீராங்கனைகள் தங்களது தரவரிசையை முன்னேற்றிக்கொள்ள உதவியாக இருக்கக்கூடும்.