3 விக்கெட்டுகளை வீழ்த்திய பூனம் யாதவ் : படம் உதவி ட்விட்டர் 
விளையாட்டு

டி20 உலகக்கோப்பை: இந்தியாவுக்கு 2-வது வெற்றி; 16வயது ஷபாலி அதிரடி ஆட்டம், பூனம் யாதவ் மாயஜாலப் பந்துவீச்சில் சுருண்டது வங்கதேசம்

பிடிஐ

பூனம் யாதவின் மாயாஜால சுழற்பந்துவீச்சால் பெர்த்தில் நடந்த மகளிர் டி20 உலகக்கோப்பைப் போட்டியின் குரூப் ஏ ஆட்டத்தில் வங்கதேச அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி.

முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்தது. 143 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் சேர்த்து 18 ரன்களில் தோல்வி அடைந்தது.

16 வயதான ஷபாலி வர்மா அதிரடியாக ஆடிய 17 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 39 ரன்கள் சேர்த்தார். அணியின் ஸ்கோர் உயர்வுக்கு ஷபாலியின் ஆட்டம் முக்கியக் காரணம். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

அருந்ததி ரெட்டி

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த முதலாவது லீக் ஆட்டத்திலும் பூனம் யாதவ் தனது சுழற்பந்துவீச்சால் அசத்தினார், இன்றைய ஆட்டத்திலும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

இதன் மூலம் இந்திய மகளிர் இதுவரை தான் பங்கேற்ற இரு லீக் ஆட்டங்களிலும் வென்றுள்ளது.

டாஸ்வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷபாலி வர்மா 39 ரன்களும், ரோட்ரிக்ஸ் 34 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீராங்கனைகள் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.

வங்கதேசம் தரப்பில் சல்மான் கட்டூன், கோஷ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

143 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் வங்கதேசம் அணி களமிறங்கியது. ஆனால், இந்திய வீராங்கனைகள் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கேதச அணிக்கு அதிர்ச்சி அளித்தனர்.

ஆட்டநாயகன் விருது பெற்ற ஷாபாலி வர்மா

பாண்டே வீசிய 2-வது ஓவரில் சுல்தானா 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் சீரான இடைவெளியில் வங்கதேச அணியினர் விக்கெட்டுகளை இழந்து வந்தனர். அதிகபட்சமாக வங்கதேச அணியில் முர்ஷிதா கதூன் 26 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து அருந்ததி ரெட்டி பந்துவீச்சில் வெளியேறினார்.

ஆனால் பூனம் யாதவ் பந்துவீச வந்தபின் வங்கதேச வீராங்கனைகள் ரன் குவி்ப்பு குறையத் தொடங்கியது. நிகர் சுல்தானா 35 ரன்கள் சேர்த்து கெய்வாட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சல்மா கட்டூன் 2 ரன்னிலும், அக்தர் 2 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

வங்கதேச அணிய வீராங்கனைகளைத் தனது சுழற்பந்துவீச்சால் திணறடித்த பூனம் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பாண்டே, அருந்ததி ரெட்டி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

SCROLL FOR NEXT