மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பரபரப்பான கட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இலங்கை அணி.
கொழும்பு நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 289 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான ஷாய் ஹோப் 140 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 115 ரன்கள் விளாசினார். டேரன் பிராவோ 39, ராஸ்டன் சேஸ் 41, கீமோ பால் 32, ஹைடன் வால்ஷ் 20 ரன்கள் சேர்த்தனர்.
இலங்கை அணி சார்பில் இஸ்ரு உதனா 3 விக்கெட்கள் கைப்பற்றினார். 290 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணிக்கு அவிஷ்கா பெர்னாண்டோ, கேப்டன் கருணாரத்னே ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் ஜேசன் ஹோல்டர் வீசிய 18-வது ஓவரின் கடைசி பந்தில் கருணாரத்னே ஆட்டமிழந்தார். 57 பந்துகளை சந்தித்த அவர், 7 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் சேர்த்தார்.
அடுத்த சில ஓவர்களில் அவிஷ்கா பெர்னாண்டோ (50), அல்ஸாரி ஜோசப் பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் சீரான இடைவெளியில் இலங்கை அணி விக்கெட்களை இழந்தது. குசால் மெண்டிஸ் 20, ஏஞ்சலோ மேத்யூஸ் 5, தனஞ்ஜெயா டி சில்வா 18, குசால் பெரேரா 42, திசாரா பெரேரா 32 ரன்களிலும், இஸ்ரு உதனா ரன் ஏதும் எடுக்காத நிலையில் வெளியேறினர்.
262 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்த நிலையில் சுழற்பந்து வீச்சாளரான வானிடு ஹசரங்கா அபாரமாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
9-வது விக்கெட்டுக்கு லக்சன் சந்தகனுடன் இணைந்து ஹசரங்கா 27 ரன்கள் சேர்த்தார். கடைசி 6 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே தேவை என்ற நிலையில் கீமோ பால் வீசிய முதல் பந்தில் லக்சன் சந்தகன் (3) ரன் அவுட் ஆனார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் அடுத்த பந்தை கீமோ பால் நோ-பாலாக வீச இலங்கை அணி 49.1 ஓவரில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹசரங்கா 39 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் அல்ஸாரி ஜோசப் 3, கீமோபால் 2, ஹைடன் வால்ஷ் 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் வரும் 26-ம் தேதி ஹம்பன்தோட்டாவில் நடைபெறுகிறது.- ஏஎப்பி