டெஸ்ட் கிரிக்கெட் உலகிற்கு இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் கிடைத்திருக்கிறார், அவர்தான் நியூஸிலாந்தின் உயரமான கைல் ஜேமிசன், இன்று வெலிங்டனில் புஜாரா, கோலி, ஹனுமா விஹாரி விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய நடுவரிசையைக் காலி செய்தார்.
விக்கெட்டுகள் எடுத்தது பெரியதல்ல அதனை வீழ்த்திய விதம் கடின உழைப்பையும் சாதுரியத்தையும் சார்ந்தது. புஜாராவுக்கு ஒரு பந்தை உள்ளுக்குள் செலுத்தி பிட்ச் ஆனவுடன் வெளியே எடுக்குமாறு வீசினார் மட்டையின் விளிம்பை புஜாராவின் உதவியில்லாமலேயே பந்து தொட்டு கேட்ச் ஆனது. விராட் கோலி 7 பந்துகளையே சந்தித்தார் அதற்கு முந்தைய 6 பந்துகள் சற்றே ஷார்ட் ஆஃப் லெந்தில் வீசப்பட்டது, பிறகு கவர் திசையில் இடைவேளி விட்டு ஒரு ஃபுல் லெந்த் பந்தை 4-5வது ஸ்டம்பில் வீசினால் கோலி மட்டையை நீட்டியபடி ட்ரைவ் ஆடவந்து எட்ஜ் ஆவார் என்பது சமீபகால கோலி அவுட் டெம்ப்ளேட் ஆகி வருகிறது, அதையேதான் ஜேமிசன் செய்தார்.
சச்சின் டெண்டுல்கர் 2004 ஆஸி. தொடரில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்தை ஆடி அவுட் ஆகிக் கொண்டிருந்தார், ஆனால் சிட்னி டெஸ்ட்டில் ஒரு பந்தைக் கூட அவர் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ட்ரைவ் ஆடப் போகவில்லை இரட்டைச் சதம் விளாசினார், ஒரு கட்டத்தில் எவ்வளவு ஜீனியஸ் பிளேயராக இருந்தாலும் தன் ஈகோவை விட்டுவிட்டு ஆட்டத்தின் போக்குக்கு தன்னை ஒப்புக் கொடுப்பதுதான் சிறந்த அணுகுமுறை. நாம் ஆட்டத்தை ஆடவில்லை, ஆட்டம்தான் நம்மை ஆடுகிறது என்ற, அசவுகரியமாயினும், தன்னடக்க மனோபாவம் ஒரு கட்டத்தில் ‘ஜீனியஸ்’களுக்கும் தேவைப்படும். அதுதான் கோலிக்கும் தேவைப்படுகிறது.
தன்னம்பிக்கைக்கும் ஈகோவுக்கும் ஒரு நூலிழைதான் இடைவெளி.
இந்நிலையில் கைல் ஜேமிசன் கூறும்போது, “என்ன நடந்தது என்பது மெதுவாகத்தான் எனக்குள் இறங்குகிறது. கடந்த 2 வாரங்கள் கனவாகவே இருந்து வந்தது. அணியை வலுவான நிலையில் வைக்க முடிந்தது குறித்து மகிழ்ச்சி.
கோலி மிகப்பெரிய வீரர், அணியின் வரிசையில் ஒரு முக்கியமான வீரர் அவரை விரைவில் வீழ்த்தியது நிச்சயம் மகிழ்ச்சியே. 2 விக்கெட்டுகளை தொடக்கத்தில் வீழ்த்துவதுதான் என் உணர்ச்சியின் ஆரம்பம். நிச்சயம் இது சிறப்பு வாய்ந்தது.
உலகின் அனைத்து இடங்களிலும் கோலி ரன்களைக் குவித்துள்ளார், எனவே அவரது பேட்டிங்கில் ஏதோ ஒரு சிறுகுறையை ஊதிப்பெருக்குவது சரியல்ல. பிட்சில் உதவியிருக்கும் போது கோலியை இப்படித்தான் ஆட வைக்க வேண்டும் என்று நாங்கள் முயற்சித்தோம் அது நடந்தது அவ்வளவே. ஸ்டம்பில் வீசினால் அவர் வலுவான வீரர் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்.
கடந்த சில வாரங்களாகவெ நான் என் பந்து வீச்சை எளிமையாக வைத்துக் கொண்டேன். இந்திய அணி வீரர்களை மட்டையில் ஆடச்செய்ய வேண்டும் கொஞ்சம் பவுன்ஸ் இருப்பதால் முன்னால் வந்து ஆடவைப்பது பலன் தரும், பிட்ச் உதவியினால் என் திட்டங்கள் சுலபமானது. நானும் பதற்றமடையாமல் நல்ல இடங்களில் வீசினேன்.
என் உயரம் காரணமாக கொஞ்சம் புல் லெந்தில் வீசினால் பிட்சில் இருக்கும் பவுன்ஸ் உதவும். எனது 2 வது ஸ்பெல்லில் சில பந்துகள் ஆடமால் விடப்பட்டன, எனவே பேட்ஸ்மென்களை முன் காலில் வந்து ஆட வைக்க வேண்டும். நான் உலகின் மற்ற வீச்சாளர்கள் போல் அதிவேகமாக வீசக்கூடியவன் இல்லை. எனவே வைட் ஆஃப் த கிரீச்லிருந்து அந்தக் கோணத்தில் வீசுவதும் மட்டையாளர்களுக்கு கொஞ்சம் கடினத்தை அதிகரிக்கும். ஷார்ட் பிட்ச் பந்துகளும் என் சாதகமாகும்.
கொஞ்சம் காற்று அடித்ததும் என் அதிர்ஷ்டம், இது போன்று எப்போதும் அமையுமா என்று தெரியாது” என்றார் கைல் ஜேமிசன்.
-பிடிஐ தகவல்களுடன் இரா.முத்துக்குமார்