விராட் கோலி : கோப்புப்படம் 
விளையாட்டு

ரன் மெஷினுக்கு என்னாச்சு? 19 இன்னிங்ஸ்களாக சதம் இல்லை; நியூஸி. தொடரில் ஜொலிக்காத கோலியின் ஆட்டம்

ஐஏஎன்எஸ்

இந்திய அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் கேப்டன் விராட் கோலியின் மோசமான பேட்டிங் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் தொடர்ந்து வருகிறது.

வெலிங்கடனில் இன்று தொடங்கிய நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் கைல் ஜேமிஸன் பந்துவீச்சில் 2 ரன்னில் விராட் கோலி வெளியேறினார். ஆப்சைடு விலகிச் சென்ற பந்தைத் தேவையில்லாமல் தொட்டு ஸ்லிப்பில் ராஸ் டெய்லரிடம் விக்கெட்டைப் பறிகொடுத்தார் விராட் கோலி.

இந்திய அணியின் முக்கியத் தூண் அசைக்க முடியாத பேட்ஸ்மேன், ரன் மெஷின் கேப்டன் விராட் கோலி என்பதில் சந்தேகமில்லை. பல போட்டிகளில் நிலைத்து ஆடி இந்திய அணிக்கு வெற்றிகளைத் தேடிக் கொடுத்துள்ளார்.

களத்தில் இறங்கினாலே அரை சதம் அல்லது சதம் அடிக்காமல் மீண்டும் பெவிலியன் திரும்பாமல் இருக்க மாட்டார். எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார் கிங் கோலி என்ற அச்சம் எதிரணிக்கு இருந்தது. ஆனால், நியூஸிலாந்து தொடருக்கு வந்ததில் இருந்து கோலியின் பேட்டிங்கில் ஒரு மந்தமான போக்கு காணப்படுகிறது என்பதை மறுக்க முடியாது.

நியூஸிலாந்து தொடரில் 4 டி20 போட்டிகளில் 125 ரன்களும், 3 ஒருநாள் போட்டிகளில் சேர்த்து 75 ரன்கள் மட்டுமே கோலி சேர்த்து மொத்தம் 180 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இதில் ஒரு அரை சதம் மட்டுமே அடங்கும்.

கடந்த 19 இன்னிங்ஸ்களாக விராட் கோலியின் ஆட்டம் மோசமாக இருந்து வருகிறது. கடந்த 19 இன்னிங்ஸ்களாக விராட் கோலி போட்டியில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

கடைசியாக கொல்கத்தாவில் வங்கதேசத்துக்கு எதிராக நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் 136 ரன்கள் சேர்த்தார் கோலி. அதன்பின் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற சதம் அடிக்காமல் விராட் கோலி நீண்ட இன்னிஸ்களாக விளையாடுவது முதல் முறை அல்ல. இதற்கு முன் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அக்டோபர் வரை 25 இன்னிங்ஸ்களாக சதம் அடிக்காமல் கோலி இருந்தார். இங்கிலாந்து தொடருக்கு சென்ற மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 134 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

அதன்பின் கடந்த 2011-ம் ஆண்டில் பிப்ரவரி முதல் செப்டம்பர் மாதம் வரை 24 இன்னிங்ஸ்களாக சதம் அடிக்காமல் கோலி இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை விராட் கோலி எடுத்த 70 சதங்களில் 84 டெஸ்ட் போட்டிகளில் 27 சதங்களும், 248 ஒருநாள் போட்டிகளில் 43 சதங்களும் அடங்கும்.

SCROLL FOR NEXT