விளையாட்டு

கோலியிடம் நல்ல தலைமைத்துவ திறமைகள் உள்ளன: ஜெயசூரியா பாராட்டு

பிடிஐ

சங்ககாரா போன்ற வீரர்களுக்கு மாற்று வீரர் கிடைப்பது அரிது என்று கூறிய முன்னாள் இலங்கை அதிரடி தொடக்க வீரர் சனத் ஜெயசூரியா விராட் கோலியின் தலைமைத்துவ திறமைகளை விதந்தோதியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

“குமார் சங்ககாரா, தில்ஷன், ஜெயவர்தனே போன்ற வீரர்களுக்கு மாற்று வீரர்கள் கிடைப்பது அரிதிலும் அரிது. பெரிய வீரர்கள் ஓய்வு பெறும்போது திரிமானே, சண்டிமால், போன்ற இளம் தலைமுறையினரிடம் நாம் நம்பிக்கை வைப்பது அவசியம். சண்டிமால், மேத்யூஸ், திரிமானே ஆகியோர் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும், நாமும் பொறுமை காப்பது அவசியம். நிச்சயம் இவர்கள் அணியை நிலை நிறுத்துவர்.

இந்த டெஸ்ட் தொடரின் முடிவுகள் கணிக்கக் கடினமானவை. இரு அணிகளுமே தரமான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். 3-வது டெஸ்ட் பிட்சில் கொஞ்சம் பவுன்ஸ் இருக்கும். பிற்பாடு ஸ்பின்னர்களுக்கு உதவிகரமாக இருக்கும். இரு தரப்புக்கும் வாய்ப்பளிக்கும் நடுநிலை பிட்ச்களையே நாங்கள் எப்போதும் அளிப்போம்.

விராட் கோலி நன்றாக தலைமை வகிக்கிறார். இப்போதுதான் தொடங்கியுள்ளார், அவர் இந்த வீரர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். அவர் ஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்வார். ஆனால் இதுவரை பார்த்தவரையில் அவரிடம் நல்ல தலைமைத்துவ திறமைகள் உள்ளதாக தெரிகிறது.

5 பவுலர்கள் கோட்பாடு சூழ்நிலையைப் பொறுத்து அமையும், விராட் கோலி சூழ்நிலைக்குத் தக்கவாறே ஆடுகிறார். எனவே 5 பவுலர்கள் வேண்டுமென்று அவர் முடிவெடுத்தால், அவரை கோலி ஆதரிப்பார், பவுலர்கள் மீது ஒரு கேப்டன் வைக்கும் நம்பிக்கையையும் அது எடுத்துரைப்பதாக அமையும்.

முதிர்ச்சி அடைய அடைய ரிஸ்க் எடுப்பது அதிகரிக்கும்” என்றார் ஜெயசூரியா.

SCROLL FOR NEXT