இங்கிலாந்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா டி20 தொடரை 1-2 என்று இழந்துள்ளது. உலகக்கோப்பை டி20 வரவிருக்கும் நிலையில் தென் ஆப்பிரிக்க அணிச் சேர்க்கையில் மார்க் பவுச்சர் உள்ளிட்டோர் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் டிவில்லியர்ஸ் ஆடியிருக்கலாம் ஆனால் அவர் தரப்பிலிருந்து எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால் தேர்வு செய்யப்படவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் மார்க் பவுச்சர் கூறும்போது, “ஊடகத்திலும் ரசிகர்களிடையேயும் டிவில்லியர்ஸ் மீண்டும் வருவது விவாதப் பொருளாகியுள்ளது, ஆனால் என்னைப் பொறுத்தவரையில் விவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் டிவில்லியர்ஸுடன் பேசி வருகிறேன். வெகுவிரைவில் அவர் ஒரு நல்ல முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.
நான் பதவியேற்ற முதல் நாளிலிருந்தே கூறி வருகிறேன். உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணி சிறந்த வீரர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
டிவில்லியர்ஸ் நல்ல பார்மில் இருந்தால், உலகக்கோப்பை டி20-யில் ஆட வேண்டும் என்ற அவா அவருக்கு இருந்தால், நாங்கள் கேட்கும் போது அவரால் வர முடியும் என்றால் நிச்சயம் அவர் ஆடுவார். இதில் ஈகோவெல்லாம் ஒன்றுமில்லை. சிறந்த அணியை உலகக்கோப்பைக்கு அனுப்பி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே முக்கியம்” என்றார் மார்க் பவுச்சர்.