மூத்த ஆஸ்திரேலிய அணியினர் இங்கிலாந்தில் மண்ணைக் கவ்வியுள்ள அதே வேளையில் இங்கு ஆஸ்திரேலியா ஏ வீரர்கள் இந்தியா ஏ அணியை ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளனர்.
முதல் டெஸ்ட் டிரா ஆக, சென்னையில் நடைபெற்ற 2-வது 4 நாள் டெஸ்டில் ஆஸ்திரேலியா ஏ வெற்றி பெற தேவையான 62 ரன்களை 6.1 ஓவர்களில் விளாசியது. பிராக்யன் ஓஜா 3 ஓவர்களில் 33 ரன்கள் விளாசப்பட்டார். பாபா அபராஜித் 3 ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்தார்.
உஸ்மான் கவாஜா 23 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 41 ரன்கள் எடுக்க முதல் இன்னிங்சில் 150 ரன்கள் விளாசி வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த பேங்க்ராப்ட் 14 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 21 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
267/6 என்று தொடங்கிய இந்தியா ஏ 7 ரன்களுக்கு மீதமுள்ள 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஜி.எஸ். சாந்து 4 விக்கெட்டுகளையும் ஓகீப் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சாந்து ஆஃப் ஸ்பின் வீசினார் என்பதும் கவனிக்கத் தக்கது.
ஷ்ரேயஸ் கோபாலுக்கு அத்தகைய ஒரு பந்து எழும்ப ஷார்ட் லெக் திசையில் பேங்க்ராப்டிடம் கேட்ச் ஆனது. வருண் ஆரோன் தடதடவென மேலேறி வந்து பந்தைக் கோட்டைவிட்டார். பாபா அபராஜித்துக்கும் கூடுதல் பவுன்ஸ் ஆட்டம் காட்டியது.
இந்தியா ஏ இன்னிங்ஸ் 274 ரன்களில் முடிவடைய, ஆஸ்திரேலியா ஏ தேவையான 62 ரன்களை 6.1 ஓவர்களில் அடித்து நொறுக்கியது.
2 போட்டிகள் கொண்ட அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா ஏ 1-0 என்று கைப்பற்றியது. விராட் கோலி 2 இன்னிங்ஸ்களிலும் தன்னம்பிக்கையுடன் ஆடவில்லை, அவர் 16 மற்றும் 45 ரன்களில் வீழ்த்தப்பட்டார், புஜாராவும் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. பந்துவீச்சில் 2 டெஸ்ட் போட்டிகளிலும் பிராக்யன் ஓஜா தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
பாபா அபராஜித் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சிறப்பாக வீசி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.