பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடருக்காக வீரர்கள் உடற்கூறு சோதனை மேற்கொண்டு தங்கள் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கடந்த மாத இறுதியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு வலியுறுத்தியிருந்தது.
அதன்படி உடற்தகுதி சோதனை மேற்கொண்ட பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல், தன் உடல் தகுதி குறித்து பயிற்றுனர் கொழுப்பு அதிகம் இருப்பதாகக் கூற, தன் ஆடையைக் களைந்து ‘என் உடம்பில் எங்கு கொழுப்பு இருக்கிறது என்று காட்ட முடியுமா?’என்று கேட்டது கடும் சர்ச்சைகளைக் கிளப்பியது, உமர் அக்மல் சில ஆண்டுகளுக்குத் தடை செய்யப்படவும் வாய்ப்பிருந்ததாக தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்து உமர் அக்மல் மீது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது, அந்த விசாரணையின் முடிவில், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தியதில் ஒட்டுமொத்த சம்பவமும் தவறான புரிதலில் நடந்ததாகத் தெரியவந்துள்ளது. உமர் அக்மலும் தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டார். எனவே உமர் அக்மலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மன்னித்து விட்டது, மேலும் உமர் அக்மல் ஒரு மூத்த வீரராக தன் பொறுப்பை உணர்ந்து செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
“இந்த விவகாரம் இத்துடன் முடிந்து விட்டது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் உமர் அக்மலும் இது தொடர்பாக மேலும் கருத்துக்கள் கூறுவதைத் தவிர்ப்போம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உமர் அக்மல் கடைசியாக 2011-ல் டெஸ்ட் போட்டியில் ஆடினார். ஒருநாள், டி20 அணிகளிலும் கூட அவர் வருவதும் போவதுமாக இருந்து வருகிறார்.