ஹாமில்டனில் நடைபெறும் வார்ம்-அப் போட்டியில் இந்திய அணியை 263 ரன்களுக்குச் சுருட்டிய நியூஸிலாந்து லெவன் அணியும் இந்திய வேகப்பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் 235 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் சுருண்டது.
28 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணியின் 2வது இன்னிங்சில் மயங்க் அகர்வால், பிரிதிவி ஷா அதிரடி தொடக்கம் தந்து 7 ஓவர்களில் 59 ரன்களை விக்கெட் இழப்பின்றி ஆட்ட முடிவில் எடுத்துள்ளனர்.
பிரிதிவி ஷா 25 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 35 ரன்களுடனும் மயங்க் அகர்வால் 17 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 23 ரன்களுடனும் நாளை 3ம் நாளில் களமிறங்கவிருக்கிறார்கள்.
நியூஸிலாந்து அணி தன் முதல் இன்னிங்சில் 74 ஓவர்களில் 235 ரன்களுக்குச் சுருண்டது. பும்ரா 11 ஓவர்களில் 18 ரன்களுகு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஷமி 10 ஓவர்களில் 17 ரன்களுக்கு அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் சைனி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர், ஆனால் உமேஷ் யாதவ், சைனி அதிக ரன்களை விட்டுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. பும்ரா, ஷமி உயர்தர வேகப்பந்து வீச்சை வெளிப்படுத்தினர். அஸ்வின் 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.
நியூஸிலாந்து தரப்பில் கூப்பர் என்பவர் மட்டும் அதிகபட்சமாக 40 ரன்களை எடுத்தார். உமேஷ் யாதவ்வும், சைனியும் முதல் ஸ்பெல்லில் அதிகமாக ஃபுல் லெந்த் பந்துகளை வீச பும்ரா பேக் ஆஃப் லெந்தில் வீசி அசவுகரியமான முறையில் பந்தை எழும்பச் செய்தார். வில் யங் என்பவருக்கு ஒரு பந்தை காற்றில் உள்ளே செலுத்தி பிறகு வெளியே எடுக்க எட்ஜ் ஆகியது. ரிஷப் பந்த் கேட்ச் எடுத்தார். அதே போல் ஃபின் ஆலன் என்பவரை குழப்பத்தில் ஆழ்த்தி இன்ஸ்விங்கரில் பும்ரா பவுல்டு செய்தார்.
பும்ரா, ஷமி அளவுக்கு யாதவ், சைனி வீசவில்லை. பிட்ச் கொஞ்சம் பேட்டிங்குக்குச் சுலபமானது என்பதை ஷா, அகர்வால் ஜோடி தங்களது அதிரடி மூலம் நிரூபித்துள்ளனர்.