விளையாட்டு

ஆசிய அணிகள் பாட்மிண்டன் அரை இறுதியில் இந்தியா

செய்திப்பிரிவு

ஆசிய அணிகள் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்திய ஆடவர் அணி அரை இறுதிக்கு முன்னேறியது.

பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் இந்திய ஆடவர் அணி கால் இறுதி சுற்றில் தாய்லாந்தை எதிர்த்து விளையாடியது. முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் இந்தியாவின் சாய் பிரணீத் 14-21, 21-14, 12-21 என்ற செட் கணக்கில் கந்தஃபோன் வாங்சரோனிடமும், கிடாம்பி காந்த் 20-22, 14-21 என்ற நேர் செட்டில் விதித்சரணிடமும் தோல்வியடைந்தனர்.

இதனால் இந்திய அணி 0-2 என பின்தங்கியிருந்தது. இதை யடுத்து நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் அர்ஜூன், துருவ் கபிலா ஜோடி 21-18, 22-20 என்ற நேர் செட் கணக்கில் தனுபத் விரியாங்க்குரா, கிட்டினுபோங் ஜோடியை வீழ்த்தியது. அடுத்து நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் லக்சயா சென் 21-19, 21-18 என்ற நேர் செட்டில் சுபன்யு அவிஹிங்ஸனானை வீழ்த்தினார்.

இதனால் போட்டி 2-2 என சமநிலையை எட்டியது. இதையடுத்து கடைசியாக நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டம் வெற்றியை தீர்மானிப்பதாக அமைந்தது.

இதில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சிராக் ஷெட்டிஜோடி 21-15, 16-21, 21-15 என்றசெட் கணக்கில் மனீபாங் ஜாங்ஜித்,நிபிட்போன் ஜோடியை தோற்கடித்தது.

இதனால் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் அரை இறுதி சுற்றில் இந்தோனேஷியாவை எதிர்கொள்கிறது இந்திய அணி.

SCROLL FOR NEXT