விளையாட்டு

கிரிக்கெட் ஆட பாகிஸ்தான் சிறந்த நாடு என்பதை மற்ற நாடுகளுக்கும் ஊக்குவிக்கவே இங்கு வந்துள்ளோம்: குமார் சங்கக்காரா

பிடிஐ

மார்ச் 2009-ல் இலங்கை அணியினர் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட அதே லாகூருக்கு எம்.சி.சி. அணியின் கேப்டனாக சங்கக்காரா மீண்டும் வந்து களமிறங்குகிறார்.

லாகூரில் 4 போட்டிகள் நடைபெறுகின்றன. மார்ச் 2009 தாக்குதலின் போது சங்கக்காரா காயமடைந்ததோடு ஒரு தோட்டா இவரது தலைக்கு அருகில் சென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எம்.சி.சி. கேப்டனாக மீண்டும் லாகூர் வந்த சங்கக்காரா கூறும்போது, “பாதுகாப்பு என்பது உலகில் எங்கும் பெரிய சிக்கல்தான். ஆனால் பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் கிரிக்கெட் நாடுகளிடையே பெரிய அளவில் நம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நம்பிக்கை மெதுவாக ஆனால் உறுதியாக ஏற்பட்டு வருகிறது. சர்வதேச அணிகள் இங்கு அதிக முறை பயணம் மேற்கொண்டு ஆடும் போது இந்த நம்பிக்கை மேன்மேலும் உறுதிபடுவதோடு பாகிஸ்தானை புறக்கணிப்பதும் கடினமானதாக மாறும்.

களத்தில் ஆடுவதன் மூலம் நாம் உலகிற்குச் செய்தியை அறிவிக்க முடியும். பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட உலகின் தலைசிறந்த இடங்களும் ஒன்று என்பதை பிற நாடுகளும் உணரும் விதமாக ஊக்குவிப்பதில் எங்கள் பங்கும் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

கடந்த காலங்களிலும் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கான அருமையான இடமாக இருந்தது, இனியும் இருக்கப்போகிறது. இன்று டி20 போட்டி தொடங்குகிறது.

SCROLL FOR NEXT