நேபாளம் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அமெரிக்க அணி 35 ரன்களுக்கு சுருண்ட மோசமான சாதனையை படைத்தது.
2023-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் தகுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கு வழிகோலாக ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை லீக் 2 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நேற்று நேபாளத்தின் கிரிதிபுரில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நேபாளம் - அமெரிக்கா மோதின.
முதலில் பேட் செய்த அமெரிக்க அணியானது சந்தீப் லமிச்சேனின் சுழலில் 12 ஓவர்களில் 35 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக தொடக்க வீரரான மார்ஷல் 16 ரன்கள் சேர்த்தார். மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்களை தாண்டவில்லை. மேலும் 3 வீரர்கள் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்கள்.
சந்தீப் லமிச்சேன் 6 ஓவர்களை வீசி ஒரு மெய்டனுடன் 16 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். சுஷன்பாரி 4 விக்கெட்கள் கைப்பற்றினார். 35 ரன்களில் சுருண்ட அமெரிக்க அணியானது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் குறைந்த ரன்களில் சுருண்ட மோசமான அணி என்ற சாதனையை ஜிம்பாப்வே அணியுடன் பகிர்ந்து கொண்டது.
ஜிம்பாப்வே அணி கடந்த2004-ம் ஆண்டு ஹராரேவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இலங்கையிடம் 35 ரன்களில் சுருண்டிருந்தது. 36 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நேபாளம் 5.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது.
நேபாள அணி வெற்றி பெற 32 பந்துகள் மட்டுமே எடுத்துக் கொண்டனது. ஒட்டுமொத்தமாக இந்த ஆட்டமானது 17.2 ஓவர்களில் முடிவடைந்தது. இதன் மூலம் இந்த போட்டி மிகக் குறைந்த ஓவர்களில் முடிவடைந்த ஆட்டமாக கிரிக்கெட் வரலாற்றில் இடம் பிடித்தது. மேலும் எதிரணியை குறைந்த ஓவர்களில் ஆட்டமிழக்க செய்த அணி என்ற சாதனையையும் நேபாளம் படைத்துள்ளது.