விளையாட்டு

வான்கடே மைதானத்தில் நுழைய நடிகர் ஷாரூக்கானுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

செய்திப்பிரிவு

2012-ல் மும்பை இண்டியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான ஐபிஎல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அதில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. அப்போது வெற்றிக்களிப்பில் மைதானத்துக்குள் நுழைய முயன்ற பாலிவுட் நடிகரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாரூக்கானுக்கும் அங்கிருந்த பாதுகாவலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வான்கடே மைதானத்தில் ஷாரூக்கான் நுழைய 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகக் குழு கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. அப்போது தடை விதிக்கப்பட்டதற்கு மதிப்பளித்து கடந்த 3 ஆண்டுகளாக வான்கடே மைதானத்துக்கு ஷாரூக் கான் வரவில்லை. அதனால் அவர் மீதான தடையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என மும்பை கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்த ஒரு சிலர் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று அவர் மீதான தடை நீக்கப்பட்டது.

ஐபிஎல் அணியின் உரிமையா ளரும், பிரபலமிக்கவர்களில் ஒரு வருமான ஷாரூக்கான், புகழ் பெற்ற கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான வான்கடேவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்ததால் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகிகள் கடும் அதிருப்தியடைந்ததாகக் கூறப்படுகிறது. அதனாலேயே மும்பை கிரிக்கெட் சங்கம் தடையை விலக்கியுள்ளது என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT