5-0 டி20 வெற்றி மூலம் வெற்றி பலூனில் உயரே பறந்து கொண்டிருந்த இந்திய அணியை ஒருநாள் தொடரைக் கைப்பற்றியதன் மூலம் கீழே இறக்கியது நியூஸிலாந்து அணி.
முதலில் ஹாமில்டனில் 340க்கும் மேலான இலக்கையும் காப்பாற்ற முடியவில்லை, 2வது போட்டியில் சனியன்று 273 ரன்கள் இலக்கையும் வெற்றியாக மாற்ற முடியவில்லை, இத்தனைக்கும் விரட்டல் கிங் கோலி இருக்கிறார், ஆனாலும் நேற்று அவரை நியூஸி அணியினர் படுத்தி எடுத்து விட்டனர், கோலியின் கவர் ட்ரைவ், அதில்தான் அதிகரன்களை அவர் சேர்ப்பது வழக்கம், அதை முடக்கினர், பந்து ஸ்விங் ஆகும் போது கோலி மனதில் ஏகப்பட்ட சந்தேகங்கள் எழ கால்கள் நகராது என்பதுதான் உண்மை.
இதனால் அவர் அவுட் ஸ்விங்கரையெல்லாம் லெக் திசையில் ஆடப்போய் ஏகப்பட்ட சிக்கலில் மாட்டினார், ஒருமுறை லீடிங் எட்ஜில் பவுலரே கேட்ச் விட்டார், பிறகு விராட் கோலிக்கு களநடுவர் எல்.பி.தீர்ப்பளிக்கவில்லை, எல்.பி.யில் தப்பினார், அது பேட் எட்ஜ் என்று நியூஸிலாந்து மேல்முறையீட்டை கைவிட்டது, ஆனால் ரீப்ளேயில் பேட் எட்ஜ் இல்லை என்பதோடு ‘அம்பயர்ஸ் கால்’ என்றும் வந்து விட்டது, வழக்கம் போல் களநடுவர் அவுட் கொடுத்திருந்தால் அது அவுட்தான். ஆனால் நடுவர் அவுட் கொடுக்கவில்லை. தென் ஆப்பிரிக்கா இங்கு வந்து ஆடும் டெஸ்ட் தொடரிலிருந்து விராட் கோலிக்கு களநடுவர்கள் எல்.பி.தர மறுத்து வருவது நடந்து வருகிறது.
இந்நிலையில் அவரை சவுதி அருமையான இன்ஸ்விங்கரில் பவுல்டு செய்தார். கோலியின் தரத்துக்கு நேற்று அவர் ஆடியது அவருக்கே வெறுப்பூட்டியிருக்கும்.
இந்நிலையில் தொடரை இழந்ததன் தாக்கத்தை தணித்துப் பேசிய விராட் கோலி, “இரண்டு ஆட்டங்களும் நல்ல ஆட்டங்கள், ரசிகர்களுக்கு விருந்து. ஆட்டத்தை எப்படி முடித்தோம் என்பதில் நான் வெகுவாகக் கவரப்பட்டேன். சைனி, ஜடேஜா அருமையான பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடித்தனர்.
ஆனால் நான் ஏற்கெனவே கூறியது போல் இந்த ஆண்டு டி20, டெஸ்ட் கிரிக்கெட் போல் ஒருநாள் போட்டிகளுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இல்லை.
வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தியிருக்கலாம். சைனி இவ்வளவு நன்றாக பேட் செய்வார் என்று நாங்கல் நினைக்கவில்லை. சூழ்நிலைகளுக்கு ஏற்ப வீரர்களே தேர்வு செய்து ஆட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
மாற்றங்களைப் பரிசீலிப்போம். இதனால் இழப்பதற்கு ஒன்றுமில்லை” என்றார் கோலி.
சமீபத்தில்தான் இயன் சாப்பல் கூறினார், கோலியின் தலைமையில் இந்திய அணி ஒவ்வொரு போட்டியையும் வெல்லவே களமிறங்குகிறது என்றார். இவரது தலைமை இப்படி என்றார்.. ஆனால் கோலியோ ஒருநாள் போட்டிகளுக்கு இந்த ஆண்டில் முக்கியத்துவம் இல்லை என்று சர்வசாதாரணமாக தொடரை இழந்ததை ஊற்றி மூடிவிட்டார்!!
-நோபாலன்