நெரிஜஸ் வால்ஸ்கிஸ் 
விளையாட்டு

சென்னை - பெங்களூரு இன்று மோதல்

செய்திப்பிரிவு

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி - பெங்களூரு எப்சி மோதுகின்றன.

சென்னையின் எப்சி 14 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 3 டிரா,5 தோல்விகளுடன் 21 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில்உள்ளது. ஜான் கிரகோரி வெளியேறியதும் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற ஓவன் கோய்லி மேற்பார்வையில் சென்னையின் எப்சி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் பயனாக கடந்த 4 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுபிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது சென்னையின் எப்சி.

இந்த 4 ஆட்டங்களிலும் சென்னையின் எப்சி 15 கோல்களை அடித்திருந்தது. அணியின் நட்சத்திர வீரரான நெரிஜஸ் வால்ஸ்கிஸ் 12 கோல்கள் அடித்து இந்த சீசனில் அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்.

இன்றைய ஆட்டத்திலும் அவரது கோல் வேட்டை தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஃபேல்கிரிவல்லெரோ, ஆண்ட்ரே ஸ்கெம்ப்ரி, சாங்க்டே ஆகியோரும் அணிக்கு வலு சேர்ப்பவர்களாக உள்ளனர். இடைநீக்கம் காரணமாக அனிருத் தாபா இன்றைய ஆட்டத்தில் களமிறங்க முடியாத நிலை உள்ளது. அவருக்கு பதிலாக ஜெர்மன்ப்ரீத் சிங் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நட்சத்திர வீரரான சுனில் சேத்ரியை உள்ளடக்கிய நடப்பு சாம்பியனான பெங்களூரு எப்சி 15 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 4 டிரா, 3 தோல்விகளுடன் 28 புள்ளிகள் பெற்று 3-வது இடம் வகிக்கிறது. இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றியை வசப்படுத்தும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளும்.

SCROLL FOR NEXT