கிரிக்கெட் ஆட்டத்தில் மற்ற அணிகளை விட இந்திய அணி சிறந்து விளங்குவதாகக் கூறிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் முஷ்டாக் முகமது அதற்குக் காரணம் வலுவான உள்நாட்டுக் கிரிக்கெட் அமைப்பே என்று தெரிவித்துள்ளார்.
76 வயதான முஷ்டாக் முகமது பாகிஸ்தானின் இளம் கேப்டன் என்ற சாதனைக்குச் சொந்தக் காரர் ஆவார், தற்போது பர்மிங்ஹாமில் இருக்கிறார், இவர் பிடிஐயிடம் கூறியதாவது:
இந்திய அணி பாகிஸ்தானை விட, ஏன் மற்ற சில அணிகளை விடவும் பிரமாதமாகத் திகழக் காரணம் உள்நாட்டு கிரிக்கெட் அமைப்புதான், அதில் அவர்கள் பெரிய மாற்றங்களையெல்லாம் கொண்டு வரவில்லை, தேவையான மாற்றங்களை அவ்வப்போது செய்கின்றனர்.
இந்திய உள்நாட்டு அணி வீரர்களுக்கும், சர்வதேச வீரர்களுக்கும் நல்ல சம்பளம் தரப்படுகிறது, அதனால் வலுவான வீரர்களை தொடர்ந்து அணிக்குள் அவர்களால் கொண்டு வர முடிகிறது.
நல்ல சம்பளத்துடன் வீரர்களை நன்றாக நிர்வாகம் கவனித்துக் கொள்கிறது. இதனால் ஆட்டத்தில் மட்டும் அவர்களால் கவனம் செலுத்த முடிகிறது. இந்திய அணி நம்பர் 1 என்பதற்குக் காரணம் எவ்வளவு போட்டிகளை சொந்த மண்ணில் ஆடுகின்றன, அயல்நாட்டிலும் கூட இப்போது இந்திய அணி நன்றாக ஆடுகின்றனர். மாறாக பாகிஸ்தான் உள்நாட்டில் தொடர்ச்சியாக ஆட முடிவதில்லை, டெஸ்ட் போட்டிகளும் கூட ரெகுலராக இருப்பதில்லை.
திறமையான வீரர்கள் கோலிக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்பதோடு கோலியும் உத்தி ரீதியாக நல்ல கேப்டனாகத் திகழ்கிறார். இந்திய பேட்ஸ்மென்களும் உத்தி ரீதியாக நாளுக்குநாள் வளர்ந்து வருகின்றனர்.
இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு தொடர்களை ஆட முடியாமல் போயிருப்பது துரதிர்ஷ்டமே, என்றார் முஷ்டாக் முகமது.