ஜூனியர், சப்-ஜூனியர் ஹாக்கி வீரர், வீராங்கனைகளுக்குப் பயிற்சியளிக்க வசதியாக நாடு முழுவதும் 7 நகரங்களில் உயர் செயல்திறன் மையங்களை இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்),ஹாக்கி இந்தியா அமைப்புகள் ஏற்படுத்தவுள்ளன. இதுதொடர்பாக சாய், ஹாக்கி இந்தியா அமைப்புகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
2024, 2028-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய வீரர், வீராங்கனைகளைத் தயார்படுத்துவதற்காக இந்த உயர் செயல்திறன் மையங்கள் அமைக்கப்படுகின்றன. டெல்லி தயான்சந்த் தேசிய ஸ்டேடியத்தில் செயல்படும் தேசிய ஹாக்கி அகாடமி, ஒடிசாவிலுள்ள சாய் சுந்தர்கர் மையம், போபாலில் உள்ள சாய் யுடிஎம்சிசி, பெங்களூருவில் உள்ள சாய் மையங்களில் இந்த உயர் செயல்திறன் ஹாக்கி மையங்கள் அடுத்த 3 மாதங்களில் செயல்படத் தொடங்கும்.
மீதமுள்ள 3 இடங்கள் அடுத்த ஓராண்டுக்குள் ஏற்படுத்தப்படும். இந்த உயர் செயல்திறன் மையங்களை ஹாக்கி இந்தியா அமைப்பும், இதற்காக ஏற்படுத்தப்படும் உயர் செயல்திறன் இயக்குநரும் உன்னிப்பாக கண்காணித்து வருவர். இந்த ஹாக்கி உயர் செயல்திறன் மையங்களில் சர்வதேச தரத்தில் அவர்களுக்கு பயிற்சியளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.
இந்த மையங்களுக்கு மத்திய விளையாட்டுத் துறையின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்படும். இங்கு ஹாக்கி நிபுணர்களின் தொழில்நுட்பப் பயிற்சி, விளையாட்டு அறிவியலை பயன்படுத்துதல், இளைஞர்களுக்கு உடற்கல்விப் பயிற்சியை வழங்குதல் ஆகிய பணிகள் நடைபெறும்.
முதல்கட்டமாக 7 நகரங்களில் மட்டும் இந்த செயல்திறன் மையங்கள் அமைக்கப்படும். பின்னர் நாட்டின் பல்வேறு இடங்களைத் தேர்வு செய்து அங்கும் உயர் செயல்திறன் மையம் அமைக்கப்படும். நாடு முழுவதிலும் உள்ள ஹாக்கி அகாடமிகள், சாய் மையங்களில் இருந்து இந்த உயர் செயல்திறன் மையங்களுக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுவர். ஒவ்வொரு மையத்திலும் 72 வீரர், 72 வீராங்கனைகள் இருப்பர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. – பிடிஐ