இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 125.1 ஓவர்களில் 481 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 79.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்டீவன் ஸ்மித் 78, ஆடம் வோஜஸ் 47 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் 99 பந்துகளில் அரைசதம் கண்ட வோஜஸ், 130 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வோஜஸ்-ஸ்மித் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 146 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 3 ரன்களில் ஆட்டமிழக்க, பீட்டர் நெவில் களமிறங்கினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஸ்மித் 197 பந்துகளில் சதமடித்தார். அவர் சதமடித்த வேகத்தில் ஒரு சிக்ஸரை விரட்டி, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
இதன்பிறகு பீட்டர் நெவில் 18 ரன்களில் வெளியேற, பின்னர் வந்த மிட்செல் ஜான்சன் டக் அவுட்டானார். இதையடுத்து ஸ்மித்துடன் இணைந்தார் மிட்செல் ஸ்டார்க். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 450 ரன்களைக் கடந்தது. ஸ்மித் 252 பந்துகளில் 2 சிக்ஸர், 17 பவுண்டரிகளுடன் 143 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ஸ்டார்க் 52 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் குவித்து வெளியேறினார். கடைசி விக்கெட்டாக பீட்டர் சிடில் 1 ரன்னில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் 481 ரன்களில் முடிவுக்கு வந்தது. நாதன் லயன் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவன் ஃபின், மொயீன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மிட்செல் மார்ஷை வீழ்த்தியபோது டெஸ்ட் போட்டியில் 100-வது விக்கெட்டை எடுத்தார் ஸ்டீவன் ஃபின்.
இங்கிலாந்து-26/0
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்திருந்தது. ஆடம் லித் 8, கேப்டன் அலாஸ்டர் குக் 18 ரன்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.