ரோஹித் சர்மா காயத்தினால் ஏற்பட்ட தொடக்க இடத்துக்கு மயங்க் அகர்வால் அணியில் தேர்வு செய்யப்பட்டாலும் மற்றொரு அதிரடி வீரர் பிரிதிவி ஷாவும் ஒருநாள் அணியில் இருப்பதால் அகர்வால், ஷா தொடக்க வீரர்களாக நாளை ஒருநாள் போட்டியில் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் ஒருநாள் போட்டிகளில் கே.எல்.ராகுல் மிடில் ஆர்டரில் இறங்குவார் என்று கோலி ஏற்கெனவே உறுதி செய்ததையடுத்து உத்வேகமான அகர்வால், ஷா ஜோடி தொடக்க இடத்தை அலங்கரிக்கிறார்கள் என்று தெரிகிறது.
ராகுல் விக்கெட் கீப்பராகவும் பேட்டிங்கில் நம்பர் 5 இடத்தில் ஆஸ்திரேலிய தொடரில் இறங்கியதால் அதே நிலை நீடிக்கும் என்றும் விராட் கோலி செவ்வாயன்று தெரிவித்தார்.
இது தொடர்பாக விராட் கோலி அளித்த பேட்டியில்,
“பிரித்வி ஷா நிச்சயமாகத் தொடங்கவுள்ளார், கே.எல்.ராகுல் மிடில் ஆர்டரில் இறங்குவார். கீப்பிங் மற்றும் பினிஷிங் ரோலில் ராகுல் பழகிக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்
ரோஹித் இல்லாதது துரதிர்ஷ்டமே. டி20ஆகட்டும் ஒருநாள் போட்டிகளாகட்டும் ,சமீபகாலங்களாக டெஸ்ட் போட்டிகளிலும் ரோஹித் என்ற பெயர் பட்டியலில் முதலிடம் வகிக்கும். ஆனால் இப்போதைக்கு ஒருநாள் தொடர்கள் அவ்வளவாக இல்லை.
கேன் வில்லியம்சன் ஆட முடியாமல் போனது எனக்கு ஆச்சரியமே, ஏனெனில் அவர் கொஞ்சம் சரியாகிவிட்டதாகத்தான் என்னிடம் கூறினார், ஆனால் இடது தோள்பட்டை மூட்டுப் பிரச்சினை சாதாரணமானதல்ல, எனக்கும் கூட இந்தக் காயம் ஏற்பட்டிருக்கிறது. பேட்ஸ்மென்களுக்கு தோள்பட்டை காயமிருந்தால் அட்ஜெஸ்ட் செய்தெல்லாம் ஆட முடியாது.
ரோஹித் காயமடைந்தது துரதிர்ஷ்டமே, ஆனால் அந்தக் காய வாய்ப்பைப் பெற்று ஆடும் அகர்வால், பிரித்வி ஷா ஆகியோர் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதனை மற்றவர்களுக்கான வாய்ப்பாகவே நான்பார்க்கிறேன், எதிர்மறையாக அல்ல” என்றார் விராட் கோலி.