விளையாட்டு

வங்கதேச மண்ணில் இதுவரை அடிக்கப்படாத அதிகபட்ச ஸ்கோர்: தமிம் இக்பால் சாதனை- சங்கக்காரா சாதனை உடைப்பு

செய்திப்பிரிவு

டெஸ்ட் போட்டிகளுக்காக மீண்டும் தயாராகி வரும் வங்கதேச இடது கை தொடக்க வீரர் தமிம் இக்பால் ஞாயிறன்று அமர்க்களமான சாதனை ஒன்றை புரிந்தார்

உள்நாட்டுக் கிரிக்கெட்டில் தான் ஆடும் கிழக்கு மண்டல அணிக்காக மத்திய மண்டல அணிக்கு எதிராக முச்சதம் எடுத்து 334 நாட் அவுட் என்று திகழ்ந்தார், இதனையடுத்து அவர் வங்கதேசத்தில் இதுவரை அடிக்கப்படாத மிகச்சிறந்த முதல் தர கிரிக்கெட் தனிப்பட்ட ஸ்கோரை எடுத்து சாதனை புரிந்துள்ளார்.

கிட்டத்தட்ட பாகிஸ்தானின் சயீத் அன்வர் போல் பவரையும், ‘டச்’ ஷாட்களையும் கலந்து அபாரமான ஸ்டைலில் ஆடக்கூடியவர் தமிம் இக்பால், இவர் முச்சதம் எடுத்த 2வது பங்களாதேஷ் வீரர் ஆனார்

தன் அணியின் முன்னாள் சகா ரொகிபுல் ஹசனின் 313 ரன்கள் சாதனையைத்தான் தமிம் இக்பால் முறியடித்தார். வங்கதேச மண்ணில் ஒரு இன்னிங்சில் 319 ரன்களை எடுத்து சாதனையை தன் வசம் வைத்திருந்த குமார் சங்கக்காராவின் சாதனையை தற்போது தமிம் இக்பால் உடைத்தார்.

இந்த இன்னிங்சில் 42 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடங்கும், மொத்தம் 426 பந்துகளை தமிம் இக்பால் சந்திக்க கிழக்கு மண்டல அணி 555/2 என்று டிக்ளேர் செய்தது. செண்ட்ரல் ஸோன் ஏற்கெனவே தன் முதல் இன்னிங்சில் 213 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

SCROLL FOR NEXT